பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

169
"வாழ்வாவது மாயமிது மண்ணாவது திண்ணம்
 பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
 தாழாதறஞ் செய்மின் தடங் கண்ணான்மல ரோனும்
 கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே."
- 7. 78 - 1.
(4)
 
வெந்நீர் பொறாதென்உடல் காலில்முள் தைக்கவும்
    வெடுக்கென் றசைத்தெடுத்தால்
  விழிஇமைத் தங்ஙனே தண்ணருளை நாடுவேன்
    வேறொன்றை யொருவர்கொல்லின்
அந்நேரம் ஐயோஎன் முகமவாடி நிற்பதுவும்
    ஐயநின் னருள் அறியுமே
  ஆனாலும் மெத்தப் பயந்தவன் யான்என்னை
    ஆண்டநீ கைவிடாதே
இந்நேர மென்றிலை உடற்சுமைய தாகவும்
    எடுத்தா லிறக்கஎன்றே
  எங்கெங்கு மொருதீர்வை யாயமுண் டாயினும்
    இறைஞ்சுசுக ராதியான
தொன்னீர்மை யாளர்க்கு மானுடன் வகுத்தஅருள்
    துணையென்று நம்புகின்றேன்
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "வெந்நீர் . . . அறியுமே" - (நோய் முதலியவற்றால் குளிர்ந்த நீர் தலைமுழுகவோ முகங் கைகால் கழுகவோ கூடாதென்ற பொழுது) வெந்நீரைப் பயன்படுத்த நேர்ந்தால் அடியேன் உடம்பு ஒரு சிறிதும் பொறுப்பதில்லை; காலில் முள் தைத்துவிட்டால் அதனைக் கடுமையாகக் கிள்ளிக் கிளறி அசைத்து எடுத்தால், (அத் துன்பம் பொறுக்கமாட்டாது.) கண்ணிமை மூடி அவ்விடத்தே அப்பொழுதே உம்முடைய நனி மிகக் குளிர்ந்த பெரிய திருவருளை நாடுவேன்; யாதாமோருயிரைச் சிறிது இரக்கமற்று (திருவருளுக்கு வருத்த முண்டாகுமே என்றும் எண்ணாது) ஒருவர் கொன்றுவிடுவராயின், அப்பொழுது (அடியேன் உள்ளம் மிகவும் புண்பட்டு) அந்தோ என அளவிறப்ப நொந்து முகம் வாடி வருந்தி நிற்கும் நிலையினை முதல்வனே! நின் திருவருளாற்றல் அறியுமே;

     "ஆனாலும் . . . உண்டு" - அங்ஙனமாயினும் அடியேன் மிகமிக நீக்கமுள்ளவன். (அதனால்) எளியேனை வலியவந்து ஆட்கொண்டருளிய நீ கைவிட்டுவிடாதிருந்தருள்வாயாக.