(உண்மை உணர்வார் எவர்க்கும் அவர்தம் உடல் பெருஞ்சுமையே அதுபோல்) அடியேன் உடலும் எளியேனுக்குப் பெருஞ்சுமையே, அஃதங்ஙனமிருப்ப, அவ்வுடல் நீங்கியொழிவது குறிப்பிடப்பட்ட இந்நேரமென்றோரு வரையறையில்லை; (ஆனால்) எடுத்தவுடல் இறக்கும் என்னும் யாப்புறவு எங்கெங்கும் கடமையுடன் உண்டு.
"ஆயினும் . . . நம்புகின்றேன்" - அப்படியாயினும், பழைமையான பண்பாடு நிறைந்த சுகர் முதலிய பெருமுனிவர்கள் (போற்றிசைத்துப் பூத்தூவித் தொழுது) வணங்க அவர்கள் தங்கள் தங்கள் உடம்புடனே நெடுநாள் இருந்து தொண்டியற்றும்படி வகுத்தருளிய நின்திருவருள் அடியேனுக்கும் துணைநின்றருளும் என்று நம்புகின்றேன்.
"சுத்தநிர்க் . . . .சுகவாரியே" -
(வி - ம்.) வெடுக்கென்று - கடுமையாக, விழி - கண். இமைத்து - கண்ணிமைமூடி. ஐயோ - அந்தோ. ஐய - முதல்வ. தீர்வை - யாப்புறவு; நியமம்; முடிவு. ஆயம் - கடமை. தொன்மை - பழைமை. நீர்மை - பண்பு. மானிடம் - உடம்பு.
உடம்பு சுமையென்னும் உண்மையினை வருமாறுணர்க :
| "மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் |
| உற்றார்க் குடம்பும் மிகை." |
| - திருக்குறள், 3-45. |
| "புழுநெளிந்து புண்ணழுகி யோசனை நாறும் |
| கழிமுடை நாற்றத்த வேனும் - விழலர் |
| விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் |
| சுளியார் சுமைபோடு தற்கு." |
| - நீதிநெறிவிளக்கம் - 43 |
பொறுக்கலாற்றாத் துன்பம் நேர்ந்து வருந்தினும் மெய்யடியார்கள் தண்ணருளையே நாடுவர் என்னும் மெய்ம்மை வருமாறு :
| "அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன் |
| அதுவு நான்படப் பாலதொன் றானால் |
| பிழுக்கை வாரியும் பால் கொள்வ ரடிகேள் |
| பிழைப்ப னாகிலும் திருவடிப் பிழையேன் |
| வழுக்கி வீழினும் திருப்பெய ரல்லான் |
| மற்று நானறி யேன்மறு மாற்றம் |
| ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய் |
| ஒற்றி யூரெனும் ஊருறை வானே." |
| - 7. 54 - 1 |
(5)