பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

175
பாராதி அண்டங்கள் அத்தனையும் வைக்கின்ற
    பரவெளியி னுண்மைகாட்டிப்
  பற்றுமன வெளிகாட்டி மனவெளியி னில்தோய்ந்த
    பாவியேன் பரிசுகாட்டித்
தாராள மாய்நிற்க நிர்ச்சிந்தை காட்டிச்
    சதாகால நிட்டைஎனவே
  சகசநிலை காட்டினை சுகாதீத நிலயந்
    தனைக்காட்ட நாள்செல்லுமோ
காரார எண்ணரும் அனந்தகோ டிகள்நின்று
    காலூன்றி மழைபொழிதல்போல்
  கால்வீசி மின்னிப் படர்ந்துபர வெளியெலாங்
    கம்மியா னந்தவெள்ளஞ்
சோராது பொழியவே கருணையின் முழங்கியே
    தொண்டரைக் கூவுமுகிலே
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "பாராதி . . . காட்டினை" - நிலவுலகம் முதலாகச் சொல்லப்படுகின்ற அண்டங்கள் பலவற்றையும் (கிழியின்கண்) எழுதிவைத்தாலொத்த நுண்ணிய மேலான பெருவெளியின் உண்மை நிலையினைக் காட்டியருளி, அப் பெருவெளியினை (இனம்பற்றி) இடையறாது தொடர்ந்து நிற்கும் மனவெளியினையுங் காட்டி, அந்த மனவெளியிற்றோய்ந்து உழலுகின்ற குறைபாடுடைய அடியேனுடைய அறிவுப் பண்பினையுங் காட்டியருளி, (மனத்தின் வழிப் புலன்களிற் புகுந்து நெருக்குண்ணாதபடி) மனந் தாராளமாக விரிந்து நிற்குமாறு புலன்களிற் செல்வதை நீக்குதலாகிய மனமிறக்கு நிலையினையுங்காட்டி, (அந்நிலைக்கு வேண்டத் தக்கதாகிய) திருவடி நினைவோடிருக்கும் ஓவா நிட்டையினை யுடையன் எனவே சொல்லும்படி தாளிணை தலைப்படுதலாகிய சகசநிலையுங் காட்டியருளினை;

     "சுகாதீத . . . முகிலே" - (இந்நிட்டை இன்பத்துக்கு மேற்பட்ட நிறைவின்ப நிலையாகிய) அப்பால் இன்ப நிலையமெனப்படும். சுகாதீத நிலயந்தனைக் காட்டியருள இன்னும் பன்னாள் செல்லுமோ? எண்ணிக் கணக்கெடுக்க முடியாதபடி பலகோடிக் கணக்கான மேகங்கள். காலூன்றி மழைபொழிவதுபோல் காற்று வீசி, மின்னுதல் செய்து பரவி நுண்ணிய பரவெளி முற்றும் நிறைந்து, பேரின்பப் பெருவெள்ளம் இடையறாது பொழிதற் பொருட்டுப் பெருந் தண்ணளியோடு முழங்கி (நின்திருவடியினையே புகலாகக் கொண்டு தொண்டியற்றி வாழும்) மெய்த்தொண்டர்களை (இங்கே வம்மெனப் பேரருளுடன்) அழைத்தருளும் பேரருண் மழையே!