பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

180
எந்தநாள் கருணைக் குரித்தாகு நாளெனவும்
    என்னிதயம் எனைவாட்டுதே
  ஏதென்று சொல்லுவேன் முன்னொடுபின் மலைவறவும்
    இற்றைவரை யாதுபெற்றேன்
பந்தமா னதிலிட்ட மெழுகாகி உள்ளம்
    பதைத்துப் பதைத்துருகவோ
  பரமசுக மானது பொருப்பரிய துயரமாய்ப்
    பலகாலு மூர்ச்சிப்பதோ
சிந்தையா னதுமறிவை என்னறிவி லறிவான
    தெய்வம்நீ யன்றியுளதோ
  தேகநிலை யல்லவே உடைகப்பல் கப்பலாய்த்
    திரையாழி யூடுசெலுமோ
சொந்தமா யாண்டநீ அறியார்கள் போலவே
    துன்பத்தி லாழ்த்தல்முறையோ
  சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
    சோதியே சுகவாரியே.
     (பொ - ள்) "எந்தநாள் . . . பெற்றேன்" - (அடிகளே உம்முடைய) பெருந்தண்ணளிக்கு (அடியேன்) உரிமை பெறுநாள் எந்த நாளோ என்று எளியேன் உள்ளம் இடையறாது என்னை வாட்டி வருத்துகின்றதே; (இந்நிலையில் அடியேன்) யாது என்று சொல்லமாட்டுவன்; முன்னுக்குப்பின் முரணுதலின்றி இயன்றவரை அடியேன் பெற்ற பேறு யாது?

     "பந்தமா . . . யுளதோ" - (சுடர்விட்டெரிந்து கொண்டிருக்கும்) தீப்பந்தத்தின்முன் இடப்பட்ட மெழுகைப்போல் மிக்க நடுக்கமெய்தி அடியேன் உள்ளம் உருகுகின்றதே; அங்ஙனம் உருகினாலோ மேலான பேரின்பப் பெருக்கு வந்தெய்துவது? (அவ்வின்பப் பெருக்குக்கிட்டாமையால்) பொறுக்கமுடியாத பெருந்துன்பமுண்டாகிப் பலகாலும் உயிர்ப்படங்கி மூர்ச்சையுற்றுக் கிடப்பதோ? எளியேனுடைய மனநிலை இத்தன்மைத்தென்று (என்னைவிட்டு நீங்காது உடனாயிருக்கின்ற நீ) அறிந்தருள்வை; அடியேனுடைய விளக்க விளங்கும் சிற்றறிவின்கண் நீங்காதுறைந்து என்னறிவை விளக்கிவருகின்ற முழுமுதல் தெய்வமாகிய உன்னையன்றி வேறு அறிவார் யாவருளர்?

     "தேகநிலை . . . முறையோ" - (நீரிற்குமிழி யாக்கை யென்னும் நிலைமையால்) அடியேன் உடம்பு நிலையில்லாத இயல்பினதன்றோ? உடைந்த கப்பலாகிய நாவாய், செம்மையுற்ற நாவாய் போன்று, பேரலை மோதுகின்ற பெருங்கடலின் ஊடு தடையின்றிச் செல்லவல்லதோ? (அடியேனைத்) தன் முழு உரிமையாக ஆண்டுகொண்டருளிய நீ, ஏதுந் தெரியாதவர்கள் போன்று (எல்லாம் தெரிந்துகொண்டும்)