பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

192
     (பொ - ள்) "கண்ணார . . . . . . குறைவில்லை" - (மெய்யன்பின் செயலாகக் காணப்படும்) கண்ணிறைய நீர் பெருகி உள்ள நெகிழ்ந்து உருகுதல் செய்தலும் ஆகிய வாய்மைச் செயல்கள் அடியேன்பால் மெய்யாக இல்லாவிட்டாலும் கள்ளமாக உச்சிமேற்குவித்த கையினனாய் அடியேன் ஆடுதல் புரிந்து; பாடுதலும் செய்து இடைவிடாமல் கண்களினின்று குளிர்ந்த நீர் ஒழுக்கினைக் காட்டி, மூத்தோனே என்றும், (பல வகையான ஒளிகளுக்கெல்லாம் ஒளிகொடுத்தொளிரச் செய்து) மங்காமல் ஒங்கி ஒளிர்ந்துகொண்டிருக்கும் மேலான ஒளியே என்றும், மேலெழுந்தவாரியான அன்புகாட்டி நாடக நடித்ததற்கோ குறைவில்லை;

     "அகிலமும் . . . . . . . . . யீதென்றுணர்த்தி" - (அடியேன் நடித்த நாடகத்தை) அனைத்துலகமும் சிறிதளவு அறியும்; நின்னுடைய மேலான குளிர் நிறைந்த திருவருள் அறியாததன்றே? சிறிதளவேனும் இனிதாக இரங்கியருளி நிலையான வீடுபேற்று நிலையீதென உணர்த்தியருளி;

     "சகசநிலை . . . . . . கண்டாய்" - ஒன்றித்து நின்றநிலை மாறாமலிருக்கு நிலை தந்தருளி, வேறொன்றும் நினையாமல் மெய்ம்மையாகப் பேரின்பமாயிருக்கவே, அறிவிலா எளியேனுக்குத் திருவருள் புரிந்தருள்வாயாக.

         "இகபரமிரண் . . . பொருளே" -

     (வி - ம்.) மேலெழுந்த - அகத்தினில் இல்லாமல் புறத்தில்மட்டும் காட்டுவது. சாசுவதம் - அழியாதது; என்றுமுள்ளது. சகசம் - இயல்பு.

(5)
 
காகமா னதுகோடி கூடிநின் றாலுமொரு
    கல்லின்முன் னெதிர்நிற்குமோ
  கர்மமா னதுகோடி முன்னேசெய் தாலுநின்
    கருணைப்ர வாகஅருளைத்
தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ
    தமியனேற் கருள்தாகமோ
  சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு வினையெலாஞ்
    சங்கேத மாய்க்கூடியே
தேகமா னதைமிகவும் வாட்டுதே துன்பங்கள்
    சேராமல் யோகமார்க்க
  சித்தியோ வரவில்லை சகசநிட் டைக்கும்என்
    சிந்தைக்கும் வெகுதூரம்நான்
ஏகமாய் நின்னோ டிருக்குநா ளெந்தநாள்
    இந்நாளில் முற்றுறாதோ
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.