பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

194
"பெருக லாந்தவம் பேதைமை தீரலாம்
 திருக லாகிய சிந்தை திருத்தலாம்
 பருக லாம்பர மாயதோ ரானந்தம்
 மருக லானடி வாழ்த்தி வணங்கவே."
- 5. 88 - 1.
     வினை கோடிக்கணக்காக விருப்பினும் சிவமந்திரத்தின் முன் நில்லா என்னும் உண்மை வருமாறு :

"விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
 உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
 பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
 நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே."
- 4. 11 - 3.
(6)
 
ஒருமைமன தாகியே அல்லலற நின்னருளில்
    ஒருவன்நான் வந்திருக்கின்
  உலகம் பொறாததோ மாயாவிசித்ரமென
    ஓயுமோ இடமில்லையோ
அருளுடைய நின்னன்பர் சங்கைசெய் திடுவரோ
    அலதுகிர்த் தியகர்த்தராய்
  அகிலம் படைத்தெம்மை யாள்கின்ற பேர்சிலர்
    அடாதென்பரோ அகன்ற
பெருமைபெறு பூரணங் குறையுமோ பூதங்கள்
    பேய்க்கோல மாய்விதண்டை
  பேசுமோ அலதுதான் பரிபாக காலம்
    பிறக்கவிலை யோதொல்லையாம்
இருமைசெறி சடவினை எதிர்த்துவாய் பேசுமோ
    ஏதுளவு சிறிதுபுகலாய்
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "ஒருமைமன . . . செய்திடுவரோ" - அடியேன் ஒருவனும் துன்பம் அற்று ஒழியும்படி திருவருளால் ஒருமனப்பட்டதாய் நின்அருட்பெரு வெளியில் வந்திருக்கும்படி நீ தண்ணளிபுரியின் உயர்ந்தோர் பொறத்துக்கொள்ள மாட்டாரோ? (அல்லது) வியத்தகு காரியப்பாட்டினையுடைய மாயாகாரியமானது ஓய்ந்துவிடுமோ? அடியேணையன்றி அதற்கு வேறோர் இடமில்லையோ? நின்பேரருள் பெற்ற திருவடியுணர்வுசேர் மெய்யடியார் தடைசெய்து நிற்பரோ?