உன்னிலையும் என்னிலையும் ஒருநிலை யெனக்கிடந் | துளறிடும் அவத்தையாகி | உருவுதான் காட்டாத ஆணவமும் ஒளிகண் | டொளிக்கின்ற இருளென்னவே | தன்னிலைமை காட்டா தொருங்கஇரு வினையினால் | தாவுசுக துக்கவேலை | தட்டழிய முற்றுமில் லாமாயை யதனால் | தடித்தகில பேதமான | முன்னிலை யொழிந்திட அகண்டிதா காரமாய் | மூதறிவு மேலுதிப்ப | முன்பினொடு கீழ்மேல் நடுப்பக்கம் என்னாமல் | முற்றுமா னந்தநிறைவே | என்னிலைமை யாய்நிற்க இயல்புகூ ரருள்வடிவம் | எந்நாளும் வாழிவாழி | இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி | எங்குநிறை கின்றபொருளே. |