பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

208
         "சர்வபரி . . . சிவமே" -

     (வி - ம்.) பாகம் - செம்மை. இசை - பண்; இராகம். உபாயம் - வழிவகை மோகம் - ஆசை; மயக்கம். பரிபாகம் - நுகர்வுக்குத்தகுதியானநிலை. மூதறிவு - சிவஞானம். தாகம் - வேட்கை.

     அகத்தவமாகிய யோகநிலைக்கு உணவுக் கட்டுப்பாடு இன்றியமையாது வேண்டப்படும். பரிபாகசத்திகளென்பது ஆறு கோடி மாயா சத்திகள் - அவை: காமம், வெகுளி, கடும்பற்றுள்ளம், மானம், உவகை, மதம் என்பன.

(3)
 
இமையளவு போதையொரு கற்பகா லம்பண்ணும்
    இவ்வுலகம் எவ்வுலகமோ
  என்றெண்ணம் வருவிக்கும் மாதர்சிற் றின்பமோ
    என்னில்மக மேருவாக்கிச்
சுமையெடுமி னென்றுதான் சும்மாடு மாயெமைச்
    சுமையாளு மாக்கிநாளுந்
  துர்ப்புத்தி பண்ணியுள நற்புத்தி யாவையுஞ்
    சூறையிட் டிந்த்ரசாலம்
அமையவொரு கூத்துஞ் சமைந்தாடு மனமாயை
    அம்மம்ம வெல்லலெளிதோ
  அருள்பெற்ற பேர்க்கெலாம் ஒளிபெற்று நிற்குமீ
    தருளோ அலாதுமருளோ
சமயநெறி காணாத சாட்சிநீ சூட்சுமமாத்
    தமியனேற் குளவு புகலாய்
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "இமையளவு . . . . . . . . . சுமையாளுமாக்கி" - (இயல்பு ஒன்றும் குன்றாத ஒருவருடைய) கண்ணிமை மூடித்திறக்கும் சிறு கால அளவையினை, ஊழிக்காலம் போன்று மிகப்பெரிதாக்கிக் காட்டும், மனம்; (முன்கண்ட) இவ்வுலகத்தினைப் புதிதுபோற் காட்டி எவ்வுலகமோ என்று நினைக்கும்படி செய்யும், பெண்களை மருவிநுகரும் சிற்றின்பத்தினை மிகப்பெரிய பொன்மலையாகிய மேருமலை போன்று தோற்றுவிக்கும்; (அம்மட்டோ? அப் பெண்ணின்பப் பொன்மலையை) தலைமேற் சுமையெடுங்களென்று தன்னைச் சும்மாடுமாக்கி நம்மைச் சுமையாளுமாக ஆக்கிவைக்கும்.

     "நாளும் .. . . . . . . . ஆடும் - ஒவ்வொருநாளும் தீய அறிவுகளையே உண்டாக்கி முன்புள்ளதாகிய நல்லறிவுகள் எல்லாவற்றையும் கொள்ளையிட்டுக் கண்கட்டு என்று சொல்லப்படும் இந்திரஞாலம் பொருந்தும்படி ஒரு கூடத்திளை அமைத்து ஆடும்;