பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

217
"மண்ணுலகிற் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
 பொன்னுலகம் பெறுதல் தொண்டனேனின்று கண்டொழிந்தேன்
 விண்ணுல கத்தவர்கள் விரும்ப வென்னை யானையின்மேல்
 என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே."
- 7. 100 - 5.
(8)
 
இன்னம் பிறப்பதற் கிடமென்னில் இவ்வுடலம்
    இறவா திருப்பமூலத்
  தெழுமங்கி யமிர்தொழுகு மதிமண் டலத்திலுற
    என்னம்மை குண்டலினிபால்
பின்னம் பிறக்காது சேயென வளர்த்திடப்
    பேயேனை நல்கவேண்டும்
  பிறவாத நெறியெனக் குண்டென்னின் இம்மையே
    பேசுகர்ப் பூரதீபம்
மின்னும் படிக்ககண் டாகார அன்னைபால்
    வினையேனை யொப்புவித்து
  வீட்டுநெறி கூட்டிடுதல் மிகவுநன் றிவையன்றி
    விவகார முண்டென்னிலோ
தன்னந் தனிச்சிறியன் ஆறறிலேன் போற்றிவளர்
    சன்மார்க்க முத்திமுதலே
  சர்வபரி பூரண அகண்டதத் துவமான
    சச்சிதா னந்தசிவமே.
     (பொ - ள்) "இன்னம் . . . நல்கவேண்டும்" - (முதல்வனே அடியேன் வினைக்கீடாக) இன்னமும் பிறப்பினை அடைந்து உழல வேண்டு மென்றிருப்பின், இவ்வுடலம் இறவாதிருப்பதற்கு வாயிலாக (உடம் பகத்துள்ள ஆறு நிலைகளுள் முதல் நிலையாகிய) மூலாதாரத்திலுள்ள தீயினை எழுப்பி (உச்சித் தொளையிலுள்ள) திங்கள் மண்டிலத்து நின்று ஒழுகும் இனிமைமிக்க அமிழ்தத்தினை (அடியேன்) ஆரவுண்டு நிற்க எளியேனுக்கு இயைந்துள்ள அம்மையாகிய (குண்டலியினை இயக்கும்) குண்டலியற்றாலினிடத்துப் பழுதுண்டாகாதபடி பிள்ளையெனப் பேணி வளர்ந்தருளுமாறு பேய்போன்ற அடியேனை ஒப்புவித்தருளுதல் வேண்டும்.

     "பிறவாத . . . மிகவும்நன்று" - (இன்னுமோர் அன்னைவயிற்றில்) பிறவாத பெருநெறி அடியேனுக்கு நின்திருவருளால் உண்டென்னில் இப் பிறப்பிலேயே, புகழ்ந்து சொல்லப்படும் கருப்பூரச்சுடர் போல் ஒளிவிடும்படி எல்லை சொல்ல ஒண்ணாத எங்கும் நிறைவாகிய திருவருளன்னையினிடத்தில் அடியேனை ஒப்புவித்துத் திருவடிப் பேற்று ஒளிநெறியின்கண் கூட்டுவித்தருளுதல் மிகவும் நன்மையாகும்.