கூறனைத்துங் கடந்தஎல்லைச் சேட மாகிக் | குறைவறநின் றிடுநிறைவே குலவா நின்ற | ஆறனைத்தும் புகுங்கடல்போல் சமய கோடி | அத்தனையுந் தொடர்ந்துபுகும் ஆதி நட்பே. |
(பொ - ள்) "பேறனைத்தும் . . . வரத்தே" - (இம்மை, மறுமை, வழி என்று சொல்லப்படும்) மூவகை நிலையிலும் வந்து பொருந்துகின்ற பேறுகள் எல்லாமும் (ஒரு பொருளாக மதித்தற்கில்லாதபடி) கீழ்மையுடையதென்று உதறித்தள்ளும்படி பேரின்பமாக வந்தருளிய பெருவெள்ளப் பெருக்கே! பேசா நிலையெனப்படும் மோனமாகிய தனிச் சிறப்பனைத்தும், இச் செந்நெறிக்கண் வந்து பொருந்துதற் பொருட்டென்று புகன்றருளி, அடியேனை இதன்கண் வந்து சேர்வாயாக என்றருளிய அழிவில்லாத பேரூதியமே;
"பாழ் . . . நட்பே" - பாழெனப்படும் சூனியமாகிய கொடிய மாயா காரியங்களனைத்தும் கடந்துள்ள எல்லைக்கண் மிச்சமாக நின்றருளும் குறைவில்லாமல் நிலைபெற்றிருக்கின்ற பெரு நிறைவே! விளங்குகின்ற சிற்றாறு பேராறுகளாகிய நீரோட்டங்களனைத்தும் சென்று சேர்ந்தடங்கும் பெருங் கடலையொத்து, எண்ணிறந்த சமய கோடிகளெல்லாம் தொடர்ந்து புகுகின்ற முதன்மை மிக்க நல்லுறவே.
(வி - ம்.) பேறு - ஊதியம், அணு - மதிக்கத்தகாத சிறு பொருள். வீறு - பிறிதொன்றற்கில்லாத தனிச் சிறப்பு. இந்நெறி - செந்நெறி, நன்னெறி; சித்தாந்த சைவப் பெருநெறி, மேவு - பொருந்த. வரத்து - பேரூகியம்; பெரும்பாக்கியம். பாழென்பதம், சூனியமென்பதும் இன்மைப் பொருட்டன்று. விளங்காமைப் பொருட்டு. பகல் விளக்கினைப் பாழென்று பகர்வ. வெய்ய - கொடிய. மாயைக் கூறு - மாயா காரியங்கள். சேடம் - மிச்சம்.
ஆறுகள் அனைத்தும் பெருங்கடலை நோக்கி வருமாறு போன்று சமயங்களனைத்தும் விழுமிய முழுமுதலாம் சிவபெருமானையே நோக்கி வருமுண்மை வருமாறு :
| "அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள்1 |
| ஒன்றொன்றொ டொவ்வா துரைத்தாலும் - என்றும் |
| ஒருகனையே நோக்குவா ருள்ளத் திருக்கும் |
| மருதனையே நோக்கி வரும்." |
| - 11. பட்டினத். திருவிடை - மும் - 17. |
(9)
1. | 'ஆறொன் றியசம.' 4. 101 - 4. 'அறுவகைச்.' சிவஞானசித்தியார், மங்கல வாழ்த்து. |