பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

266
"வான நாடரும் அறியொ ணாதநீ
    மறையி லீறுமுன் தொடரொ ணாதநீ1
 ஏனை நாடரும் தெரியொ ணாதநீ
    என்னை யின்னிதாய் ஆண்டு கொண்டவா
 ஊனை நாடகம் ஆடு வித்தவா
    உருகி நான்உனைப் பருக வைத்தவா
 ஞான நாடகம் ஆடு வித்தவா
    நைய வையகத் துடைய விச்சையே."
- 8. ஆனந்தாதீதம் 5.
(4)
 
விமலமுதற் குணமாகி நூற்றெட் டாதி
    வேதமெடுத் தெடுத்துரைத்த விருத்திக் கேற்க
அமையுமிலக் கணவடிவா யதுவும் போதா
    தப்பாலுக் கப்பாலாய் அருட்கண் ணாகிச்
சமமுமுடன் கலப்புமவிழ் தலும்யாங் காணத்
    தண்ணருள்தந் தெமைக்காக்குஞ் சாட்சிப் பேறே
இமையளவும் உபகார மல்லால் வேறொன்
    றியக்காநிர்க் குணக்கடலா யிருந்த ஒன்றே.
     (பொ - ள்) "விமலமுதற் . . . ஆகி" - மறைகளும், நூற்றெட்டு மறை முடிவுகளும் எடுத்தெடுத்து விளக்கும் விரிவுகளுக்கு ஏற்ப, இயல்பாகவே மலமில்லாமையும், (மாயா காரிய முக் குணங்களில்லாமல்) அருட் குணமெட்டுடைமையும், பொருந்திய இலக்கணவடிவாய், அதுவும் போதாமல், வெறு வெளிக்கு அப்பாலுள்ள, நாலாம் நிலையாகிய துரிய வெளியூடு திருவருளின்கண் விளங்கும் பொருளாகி,

     "சமமுமுடன் . . . ஒன்றே" - ஒப்பும், கலப்பும், பிரிவும் அடியேங்கள் காணும்பொருட்டுக் குளிர்ந்து திகழ்கின்ற திருவருளைத் தந்தருளி எளியேங்களைக் காத்தருளுகின்ற அகம் புறம் நீங்காது அருஞ்சான்றாக நிற்கும் பேரூதியப் பொருளாம் பெரும்பேறே! நொடிப்பொழுதேனும் அனைத்துயிர்கட்கும் நன்னலஞ் செய்தருளுவதன்றி, வேறொன்றும் செய்தருளாத (முக்குணமில்லாத) எண்குணக் கடலாயிருந்தருளுகின்ற ஒப்பில்லாத விழுமிய முழுமுதலே!

     (வி - ம்.) விமலம் - மலமின்மை; மாசின்மை.

(5)
 
 1. 
'மாலேபிரமனே' 8. சாழல் - 14.