பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

268
"நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
 கலந்த மயக்கம் உலகம் ஆகலின்
 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
 திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்."
- தொல். மரபியல், 90.
(6)
 
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
    ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்
    பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
    காலமுந்தே சமும்வகுத்தக் கருவி யாதி
இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்
    விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே.
     (பொ - ள்) "அருள் . . . வாழ்வே" - (திருவருளானது உண்ணத் தெவிட்டாத வண்ணப்பெரும் பழமாய் நனிமிகக் கனிந்து வந்து இனிய சுவை தந்து யாவரையும் இன்புறுத்தும் அத்தகைய) திருவருள் பழுத்த பழ இனிப்பே, கரும்பின் பிழிவே, இனிய தேனே, அரிய அமிழ்தமே, எளியேனுடைய இருவிழியே, அருமையாகக் காணப்படும் பொருள்கள் அனைத்தும் ஆனவனே! பேரருளாகிய கருணை நீங்காத எங்கும் நிறைந்த எழில் வண்ணமாய் நின்ற ஒப்பில்லாத ஒருவனே! இயல்பாகவே துப்புரவு நிறைந்த தூய வாழ்வே!

     "கருதரிய . . . கேளே" - கருதுதலாகிய காவலுடன் கூடிய எண்ணத்தின்கண் திருவருளால் கருதிய பொருளாய்க் கனிந்து காணப்படுபவனே! அங்ஙனம் கருத்தினுட் பொருந்திக் காலமும் இடமும் வகுத்தருளி, கருவி முதலிய உறுப்புகளின் விரிவினையுங் கூட்டி, அவற்றினை ஆருயிர்களுடன் பொருத்தி அவ்வுயிர்க் கூட்டங்களை அவ்வவற்றின் வினைக்கீடாக ஆணைவழி ஆட்டுவித்தருளும் விழுப்பொருளே, அடியேன் காதலுடன் பணிந்து மொழிகின்ற விண்ணப்பத்தினைத் திருச்செவி சாய்த்தருள்வாயாக;

     (வி - ம்.) முதல்வன் வினைக்கீடாக ஆருயிர்களை ஆட்டுவிக்குந் தன்மை வருமாறு: "ஆட்டுவித்தால்" (பக்கம் - 113.) என்னுந் திருமாமறைத் திருத்தாண்டகத்தானுணர்க.

"போகியாய் இருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
 யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
 வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்டல் ஓரார்
 ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்."
- சிவஞானசித்தியார், 1. 2 - 22
(7)