பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

269
விண்ணவரிந் திரன்முதலோர் நார தாதி
    விளங்குசப்த ரிடிகள்கன வீணை வல்லோர்
எண்ணரிய சித்தர்மனு வாதி வேந்தர்
    இருக்காதி மறைமுனிவர் எல்லா மிந்தக்
கண்ணகல்ஞா லம்மதிக்கத் தானே உள்ளங்
    கையில்நெல்லிக் கனிபோலக் காட்சி யாகத்
திண்ணியநல் லறிவாலிச் சமயத் தன்றோ
    செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும்.
     (பொ - ள்) "விண்ணவ . . . ரெல்லாம்" - தேவர்களாகிய இந்திரன் முதலியவர்களும், நாரதர் முதலாகச் சொல்லப்படும் முனிவர் எழுவரும், பெரிய வீணை வல்லாரும், அளவிடற்கரிய சித்தர்களும், மனு முதலாகச் சொல்லப்படுகின்ற வேந்தர்களும், இருக்கு முதலிய மறைகளில் வல்ல முனிவர் கூட்டங்களும் எல்லாம்,

     "இந்த . . . என்றும்" - இடமகன்ற உலகம் மதித்துப் புகழும்படியாக உள்ளங்கையின் நெல்லிக்கனியினையொத்து நேரே காணும்படி அச் சிவபெருமானே விழுமிய முழுமுதல் எனப் பற்றியுள்ள திண்மையான திருவருள் நல்கிய நல்ல மெய்யுணர்வினைக் கொண்டு இந்தச் செந்நெறியாகிய சித்தாந்த சைவ நன்னெறியின் வாயிலாக வல்லவா! சொல்லுதற்கரிய உலகிய லின்பமும், திருவடி யின்பமும் பெற்றுப் பெறலரும் பேரின்பப் பெருவாழ் வணைந்தனர்.

     (வி - ம்.) சப்தரிடிகள் - எழுமுனிவர்கள், கண் - இடம். சித்தி - உலகியலின்பம். செந்நெறியில் சேர்ந்து சிவனை வழிபட்டு உய்ந்த விண்ணவர் எண்ணிலார். அவருட்சிலர்: அகத்தியர், துருவாசர், நந்திகேசுரர், மாகாளர், ததீசி, பாணினி, கந்தர், பிருங்கி, வீரபத்திரர், பிரமன், விண்டு, இந்திரன், வாணாசுரன், இராவணன், வசிட்டர், வான்மீகர், பாரத்துவாசர், கௌதமர் முதலியோர்.

     எழுமுனிவர்: அத்திரி, ஆங்கீரசன், கௌதமன், சமதக்கினி, பரத்துவாசன், வசிட்டன், விசுவாமித்திரன் என்பாரும் உளர். இங்ஙனமல்லாமல் அகத்தியன், ஆங்கீரசன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன் எனவுங் கூறுப. வரையறையினை உறுதி பண்ணுவதற்குத் தக்க கருவி நம் தாய் மொழியில் காணாமை பெரிதும் நோக்கத்தக்கது.

(8)
 
செப்பரிய சமயநெறி யெல்லாந் தந்தம்
    தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான
அப்பரிசா ளருமஃதே பிடித்தா லிப்பால்
    அடுத்ததந்நூல் களும்விரித்தே அனுமா னாதி