பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

297
உன்மேற் பாரமாகிய கடனாகும். இதனை முக்காலும் நின்திருமுன் பணிந்து மொழிகின்றேன்.

     (வி - ம்.) சுகர் முற்றவப் பேற்றொடு தோன்றியவராதலின், இறை பணியினையின்றி வேறெதனையும் மேற்கொள்ளாது திருவடியை நோக்கி நடந்து செல்லுங்கால் அவரைப் பிரிய மனமில்லாமல், அவர்பின் தொடர்ந்து ஓலமிட்டழைத்து அவர்தம் அருமைத்தந்தையார் நடந்தனர். அப்பொழுது இறைவன் திருவாணையால் திசைகளும் மரங்களும் அவ் வழைப்பினுக்கு எதிர் வினாவாக "ஏன், ஏன்" என்று மொழியலாயின. சுகரின் தந்தை வியாசராவர். இது பணியாளன் பணிபுரிந்து கொண்டிருக்குங்கால் எவரேனும் அவனையழைப்பின் அப் பணிநல்கியோன் தானே ஏன் என எதிர் வினாவுவதனோடொக்கும்.

     பேதம் - வேற்றுமை. அபேதம் - ஒற்றுமை.

(32)
 
காலமொடு தேசவர்த்த மான மாதி
    கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி
மாலறவுஞ் சைவமுதல் மதங்க ளாகி
    மதாதீத மானஅருள் மரபு வாழி
சாலமிகும் எளியேனிவ் வழக்குப் பேசத்
    தயவுவைத்து வளர்த்தஅருள் தன்மைவாழி
ஆலடியிற் பரமகுரு வாழி வாழி
    அகண்டிதா காரஅரு ளடியார் வாழி.1
     (பொ - ள்) "காலமொடு . . . மரபு வாழி" - காலமும் இடமும், செய்தியும் யாண்டும் இனிதுற நிகழும்பொருட்டு அவற்றைத் திருக்குறிப்பால் பிரிவின்றிக் கலந்து இயக்கியருளும் பெருநிலை வாழ்க. அந்நிலையினுக்கு உடனியைந்து நிற்கும் திருவருள் வாழ்க. தொன்மையிலேயே யொட்டி மயக்கமுறுதற் கேதுவாகிய ஆணவமலம் நீங்கும் பொருட்டுச் (திருவடிப்பேறு பெறும் பொருட்டும்) சைவ முதலாகச் சொல்லப்படும் அறுவகையாம் அகச்சமயங்களாகியும் அச் சமயங் கடந்த நன்னெறியாகிய பொதுமை நிலை நிற்கும் மெய்கண்டநாயனார் மரபு வாழ்க.

     "சாலமிகு..வாழி" - எளியேன் மாயாகாரிய வேறுபாடுகள் மிகுந்த உடலும் உலகும் பூண்டுகிடக்கின்றேன். எனினும் இங்ஙனம் நின்திருமுன் வழக்குப் பேசத் தண்ணளி புரிந்து வளர்த்தெடுத்த திருவருட்டன்மை வாழ்க. கல்லால மரத்தடியில் உயர்வற உயர்ந்த ஒருபெரும் சிவகுரு வாழ்க! வாழ்க. சிவபெருமானின் நிலை துண்டு பண்ணப்படும் நிலையன்று; அந்நிலைசேர் அருளுரு வாழி வாழி. அடியர்குழாமும் வாழி.

(33)
 
 1. 
'நமச்சிவாய வாழ்க.' 8. சிவபுராணம்.