பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

312
இந்நீலனுக்கே; எந்தக்காலத்திலும் இவ்வுலகியல் நெறியால் அடையும் நன்மைக்குணம் ஒருசிறிது மில்லை. (மிக்க அன்பும் அமைதியும் உள்ள கைக்குழந்தைகளைக் கண்டவர் அனைவரும் மிக்கவிருப்பங் கொண்டு எடுத்து ஒக்கலில் வைப்பர். அத்தகைய) இடுக்குவார் கைப்பிள்ளையாக இருக்கும் அன்புத்தன்மையும் அடியேன்பால் அமையவில்லை; வருந்திய மனத்துடன் ஆடு தழைதின்னும் தன்மைபோல் ஒருவரிடத்தே முற்றுங் கற்கு நிலைமையன் அல்லனாய் அரைகுறையாகக் கற்றலும், செவிச் செல்வமாகிய அரும்பெருங் கேள்வியினைக் கேட்டல் இல்லாமையுமாகிய குறைபாடுடையனாய் மனக்கலக்குற்றேன்.

     (வி - ம்.) இடுக்குதல் - பிள்ளையை இடுப்பில் வைத்தல். இடுப்பு - ஒக்கல். "ஆடு ஒரு செடியிலே தழைநிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது; செடிதோறும் போய் மேய்தல்" அதன் இயல்பு. இது கடை மாணாக்கர்க்கு ஒப்பு.

"அன்ன மாவே மண்ணொடு கிளியே
 இல்லிக் குடமா டெருமை நெய்யரி
 அன்னர் தலையிடை கடைமாணாக்கர்."
- நன்னூல், 38.
     பெரும்பொய்யினைச் சிறிதும் அஞ்சாது கூறி அதனை நிலைநாட்டி நிற்கும் பெண்ணை நீலியென உலகில் வழங்குவர். அம்முறையில் உள்ள ஆண்பாலைக்குறிக்க நீலன் என்னும்சொல் ஈண்டுக் கூறப்பட்டுள்ளது.

(6)
 
உற்றதுணை நீயல்லாற் பற்று வேறொன்
    றுன்னேன்பன் னாள்உலகத் தோடி யாடிக்
கற்றதுங்கேட் டதுமிதனுக் கேது வாகுங்
    கற்பதுங்கேட் பதுமமையுங் காணா நீத
நற்றுணையே அருள்தாயே இன்ப மான
    நாதாந்த பரம்பொருளே நார ணாதி
சுற்றமுமாய் நல்லன்பர் தமைச்சே யாகத்
    தொழும்புகொளுங் கனாகனமே சோதிக் குன்றே.
     (பொ - ள்) "உற்றதுணை . . . அமையும்" - யாண்டும் விட்டுநீங்காது ஒட்டியுறும் பெருந்துணையாகிய உன்னையல்லாமல் பற்றும் புகலிடமாக வேறொன்றனையும் நினைத்தல் செய்யேன்; பலநாளும் பலர் இடத்தும் இவ்வுலகத்தே ஓடியும் அலைந்து ஆடியும் உறுதியாகக்கற்றதும் கேட்டதும் நீயே மெய்ப்புக லென்னும் உண்மை உணர்வதனுக்குக் காரணமாகும். அதனால் இனிமேல் கற்கவேண்டுவதும் கேட்க வேண்டுவதும் ஏதுமின்மையால் போதுமான தென்பதாம்.

     "காணாநீத . . . குன்றே" - நின்திருவருளாலன்றி வேறு எவ்வகையானும் காண்டற்கரிய பாக்கியப் பொருளே! சிறந்ததுணையே! நிறையருள்புரியும் குறைவில் தாயே! நீங்காப்பேரின்பமான முப்பத்தாறாம்