துன்பத்தை விரித்துக் கூறப்புகுந்தால் ஒருநாள் இருநாள் அல்ல, பல நாளாகும். அதனால் அதைப்பற்றிப் பேசுதற்கு விதியுமில்லை.
இவ்வுண்மை வருமாறு :
| "அகத்துறுநோய்க் குள்ளினர் அன்றி அதனைச் |
| சகத்தவரும் காண்பரோ தான்." |
| - திருவருட்பயன், 42. |
(19)
இன்று னக்கன் பிழைத்திலன் நானென்றே | அன்று தொட்டெனை ஆளர சேஎன்று | நின்ற ரற்றிய நீலனைக் கைவிட்டால் | மன்றம் எப்படி நின்னருள் வாழ்த்துமே. |
(பொ - ள்) அடியேன் இந்நாளில் மட்டும் நின் திருவடிக்கு அன்பு செய்திலேன். அடியேன் எந்நாளில் உள்ளேன், அந்நாள் தொட்டு அடியேனை ஆண்டுகொண் டருளவேண்டு மென்று ஒருமனப்பட்டுக் கவன்று மொழிந்துவரும் கரவுடைய என்னைக் கைவிட்டு விடுவையானால், இவ்வுலகத்தார் எவ்வாறாக நின் திருவருளை வழுத்துதல் செய்வர்? (ஒருவரும் இலர் என்பதாம்.)
(20)
வாழ்த்து நின்னருள் வாரம்வைத் தாலன்றிப் | பாழ்த்த சிந்தைப் பதகனும் உய்வனோ | சூழ்த்து நின்ற தொழும்பரை யானந்தத் | தாழ்த்து முக்கண் அருட்செம்பொற் சோதியே. |
(பொ - ள்) எல்லாரானும் எவ்வகையானும் யாண்டும் வாழ்த்துதற்குரிய நின் திருவருள் எளியேன்பால் தண்ணளி புரிந்தாலன்றிப் பாழான நாட்டத்தினையுடைய தகுதியில்லாத, மிகவும் கயவனான யான் கடைத்தேறுவனோ? பேரன்புடன் சூழ்ந்து நின்ற தொண்டர்களைப் பேரின்பப் பெருவாழ்வில் விட்டு நீங்காது ஒட்டியுறச் செய்யும் மூன்று திருக்கண்ணினையும், திருவருளினையும் உடைய செவ்விய பொன்போன்றே மிளிரும் பேரொளிப்பிழம்பே!
(வி - ம்.) முக்கண்: அன்பறிவாற்றல்களென்னும் இச்சாஞானக் கிரியைகளாம் மூன்றன் திருக்குறிப்பு: ஞாயிறு, திங்கள், தீ என்னும் ஒளிப்பொருள்கள் மூன்றற்கும் ஒளிகொடுக்கும் கண்கள் என்றலும் ஒன்று. இறைவன் உலகப்பெரு வடிவாகத் தோற்றமளிக்கும்போது அவ் வுருவத்திற்குரிய கண்கள் இவையென்றலும் ஒன்று.
(21)
சோதி யேசுட ரேசுக மேதுணை | நீதி யேநிச மேநிறை வேநிலை | ஆதி யேஉனை யானடைந் தேன்அகம் | வாதி யாதருள் வாய்அருள் வானையே. |