பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

332
     (பொ - ள்) பேரொளிப்பிழம்பே! ஆரநிறைசுடரே! பேரின்பமே யாவர்க்குந் துணையாக நின்றருளும் சொல்லொணா அறமுறையே, மெய்ப்பொருளே! எங்கணும் பிரிவின்றி நிறைந்து நின்றருளும் பரப்பே! எல்லாம் நிலைப்பதற்கு வினைமுதற்காரணமாக நின்றருளும் ஆதியே! நின்திருவடியினை அடியேன் அருளால் அடைந்தேன்; எளியேன் உள்ளம் துன்புறாவண்ணம் நின் திருவருட் பெருவெளியினை அருள்வாயாக.

     (வி - ம்.) உள்ளம் மாயையின் காரியம். அவ்வுள்ளத்தினைத் தந்தருளிய இறைவன்பால் ஒப்புவித்துவிடின் மாயை மயக்ககற்றும் தூயவருள் மேவும். இது செப்புக் கலத்தை ஈயம் பூசுபவன்பால் ஒப்புவிப்பின் தூய வெண்மையுற்று: நல்லன வைத்துப் பருகுதற்கு ஒல்லுவதாவதை யொக்கும். ஒல்லுவது-பொருந்துவது. இவ்வுண்மை வருமாறு :

"மனமாயை மாயைஇம் மாயை மயக்க
 மனமாயை தான்மாய மற்றொன்று மில்லை
 பினைமாய்வ தில்லை பிதற்றவும் வேண்டா
 தனையாய்ந் திருப்பது தத்துவந் தானே."
- 10. 2916
(22)
 
வானைப்போல வளைந்துகொண் டானந்தத்
தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்தமெய்ஞ்
ஞானத் தெய்வத்தை நாடுவன் நானெனும்
ஈனப் பாழ்கெட என்றும் இருப்பனே.
     (பொ - ள்) மழைபோன்று அடியேனை முற்றாக வளைந்து கொண்டு பேரின்பத்தேனைப் பெறுமாறு தந்து பிரிவில்லாத புணர்ப்பினால் கூடி நிற்கும் உண்மையறிவு இன்பமாயுள்ள பெருந்தெய்வத்தை இடையறாது என்னுள்ளே உள்குவேன்; அங்ஙனம் உள்குதலாகிய தியானத்தால் நானென முனைத்துத் தோன்றும் மிகவும் இழிவான பிறப்பிற்குரிய பாழ்நெறிகளனைத்தும் கெட்டொழியும். ஒழியவே திருவடிக்கண் என்றும் பொன்றா தொன்றுபோலிருப்பன்.

     செருக்கற்றால் திருவடிசேர்தலும் நீடுவாழ்தலும் ஆருயிர்கட்கு நேரும் உண்மை வருமாறு :

"யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்
 குயர்ந்த உலகம் புகும்."
- திருக்குறள், 346.
"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்."
- திருக்குறள், 6.
(23)
 
இரும்பைக் காந்தம் இழுக்கின்ற வாறெனைத்
திரும்பிப் பார்க்கவொட் டாமல் திருவடிக்