| கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா |
| ஈறு பரநெறி யில்லா நெறியன்றே." - 10. 1512. |
(27)
தேக்கி இன்பந் திளைக்கத் திளைக்கவே | ஆக்க மாயெனக் கானந்த மாகியே | போக்கி னோடு வரவற்ற பூரணந் | தாக்கி நின்றவா தன்மய மாமதே. |
(பொ - ள்) அடியேன் மாட்டுத் திருவடிஇன்ப முற்றும் நிறைந்து திருவருளால் நுகருந்தோறும் நுகருந்தோறும் மேன்மேல் விழைவுதரும் பெருக்கமாய், எளியேனுக்குச் சொல்லொணாப் பேரின்பமாய் விளைந்து (போக்கும் வரவும் புணர்வும் இல்லா) நிறைவாய் மேலோங்கி நின்ற நிலையினை என்னென்பேன்? இந்நிலையே சிவபெருமானின் மெய்ம்மை நிலை என்பதே.
இவ்வுண்மை வருமாறு :
| "ஒன்றுஞ் சுகவடிவுக் குள்ளான தம்பிரான் |
| அன்றி யொருபொருளு மாகாதே - நின்றழுந்திச் |
| சொல்லரிய இன்பஞ் சுகத்துக் கதீதமாய் |
| நில்லவன்றா னாமே நிலை." |
| - துகளறு போதம், 57. |
நிரதிசயவின்பம் - ஈடும் எடுப்புமில்லாப் பீடுடைப் பேரின்பம்.
(28)
அதுவென் றுன்னும் அதுவும் அறநின்ற | முதிய ஞானிகள் மோனப் பொருளது | ஏதுவென் றெண்ணி இறைஞ்சுவன் ஏழையேன் | மதியுள் நின்றின்ப வாரி வழங்குமே. |
(பொ - ள்) (திருவருளால் சிவகுரவன் செவியறிவுறுத்தி யடியேனைத் திருவடியுணர்வினுள் தலைமறைவாய் அடங்கி) வேறு நின்று அதுவென நினைக்கும் நினைவும் திருவருளால் அற்று நின்ற, பெரிய மெய்யுணர்வினர் தம் உரையற்ற மோன நிலையில் ஒளிரும் மெய்ப்பொருள் எதுவென் றெண்ணிச் சிறுமதிசேர் ஏழையேன் கைகூப்பித் தலைவணங்கித் தொழுவேன்; அம் மெய்ப் பொருள் அடியேன் அறிவிற்கறிவாய் நின்று பேரின்பப் பெரும் பெருக்கினை வழங்கியருளும்.
இவ்வுண்மை வருமாறு :
| "அதுவிது1 என்பார் அவனை அறியார் |
| கதிவர நின்றதோர் காரணங் காணார் |
| மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை |
| திதமது உன்னார்கள் தேர்ந்தறி யாரே." |
| -10, 1130. |
(29)
1. | 'அதுஇது.' சிவஞானபோதம், 12. 4-1. |