பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

336
வாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப்
பாரிற் கண்டவை யாவும் பருகினை
ஓரிற் கண்டிடும் ஊமன் கனவென
யாருக் குஞ்சொல வாயிலை ஐயனே.
     (பொ - ள்) (திருவருளால் அடியேனுக்குச் செவ்விவருவித்து) எளியேனை வாரியெடுத்துத் தன்னுள் அடக்கிப் பேரின்பமாய் நிலவுலகத்தின்கண் காணப்படும் பொருளனைத்துந்தன்னுள் அடங்கத் தன்னையே காட்டியருளுந்தன்மையினை ஓர்ந்துணரின் எவருக்குஞ் சொல்லொணாத ஊமன் கண்ட கனவு போன்றுள்ளது; முழுமுதல்வனே!

     (வி - ம்.) நீருள் அடங்குவார் அந் நீரினையன்றி வேறு ஒன்றினையும் உணராமை போன்று, திருவடியுள் அடங்குவார் யாண்டும் சிவனையன்றி வேறொன்றனையும் உணரார்.

     இவ்வுண்மை வருவாறு :

"மரத்தை மறைத்தது மாமத யானை
 மரத்தின் மறைந்தது மாமத யானை
 பரத்தை மறைத்தது பார்முதற்பூதம்
 பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்"
- 10. 2251.
     (மரம் தாங்கும் பொருள், யானைவடிவம் ஆண்டுத் தாங்கப்படும் பொருள். அதுபோல பரம் தாங்கும் பொருள். பார் தாங்கப்படும் பொருள். பாரை நோக்கின் பரம் வெளிப்படாது; பரத்தை நோக்கின் பார்வெளிப்படாது. அங்ஙனமன்றி ஒருபொருளே இருநிலையுடைத்தெனக் கோடல் ஒவ்வாது. மலர்மணம் போன்று ஒன்றை நோக்குங்கால் ஒன்று புலனாகாமையும் கொள்க.)

     இவ்வுண்மை வருமாறு :

"உற்றுடனாந் துய்ப்பில் உணராவே றொன்றுமுயிர்
 பெற்றதுய்ப்பாய் நிற்கும் பிணைந்து."
(30)
 
ஐய மற்ற அதிவரு ணர்க்கெலாங்
கையில் ஆமல கக்கனி யாகிய
மெய்ய னேஇந்த மேதினி மீதுழல்
பொய்ய னேற்குப் புகலிடம் எங்ஙனே.
     (பொ - ள்) திருவடியுணர்வு திருவருளால் கைவர மெய்யடியார் அனைவர்கட்கும் நின் திருவடித்துய்ப்பில் ஐயம் சிறிதுமின்றி இன்புற்றுக் கொண்டிருக்கும், இனம் குலம் நிலை என்னும் வேறுபாட்டுநிலைமைகள் ஏதுமின்றி நின்னையே உணர்வினில் உணர்ந்து கொண்டிருக்கும் ஒண்மையர்க் கெல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனியெனத் திகழும் மெய்யனே! இந்நிலவுலகில் நிலையிலாப்