பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

338
வடிவெ லாநின் வடிவென வாழ்த்திடாக்
கடிய னேனுமுன் காரணங் காண்பனோ
நெடிய வானென எங்கும் நிறைந்தொளிர்
அடிக ளேஅர சேஅருள் அத்தனே.
     (பொ - ள்) காணப்படும் வடிவங்கள் அனைத்தும் உண்ணின்றியக்கும் நின் திருவருள் வடிவமெனக் கருதி வாழ்த்தி வழிபடாத கொடியவனாகிய யானும் உன் திருவருளின் வினைமுதற் காரண மெய்ம்மையினைக் காணவல்லனோ? எல்லாவற்றையும் தன்னகத்தடக்கி எங்கும் நிறைந்து நிற்கின்ற வானம் என்று சொல்லும்படி யாண்டும் நீக்கமற நிறைந்து விளங்குகின்ற அடிகளாகிய கடவுளே! ஆளும் வேந்தே! அருள்புரியும் அத்தனாகிய தந்தையே!

     சிவன் எல்லாமாய்நிற்குந் தன்மை வருமாறு:

"நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
 புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்
 உலகே ழெனத்திசை பத்தெனத்தான் ஒருவனுமே
 பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ."
- 8. திருத்தோ - 5
"இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
 உருக்கொண்டு தன்னடு வோங்கவிவ் வண்ணல்
 கருக்கொண்டு எங்குங் கரந்திருந் தானே
 திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே."
- 10, 2997
(34)
 
அத்த னேயகண் டானந்த னேஅருட்
சுத்த னேயென உன்னைத் தொடர்ந்திலேன்
மத்த னேன்பெறு மாமலம் மாயவான்
கத்த னேகல்வி யாதது கற்கவே.
     (பொ - ள்) அடக்கியாளும் அத்தனாகிய தந்தையே! எங்கும் விரிந்த பேரின்பப் பெருவண்ணணே! திருவருளையுடைய எல்லா ஆற்றலுமுடைய முழுமுதல்வனே! என்று உன்னை அடியேன் பற்றுச் செய்து "நும்பின் நுழைந்து" தொடர்தலைச் செய்திலேன்; (அங்ஙனஞ் செய்யாத) பெரும்பித்தாகிய உன்மத்தத்தை யுடையேன், எளியேனைப் பிணித்துள்ள பெரிய மலங்கள் மாய்ந்தொழிதற்கு முடிவிலாற்றலையுடைய முழுமுதல்வனே கற்றற்குரிய கல்வி யாது? அதனை அடியேன் கற்பதற்கு.

     மலமகலக் கற்குங் கல்வியுண்மை வருமாறு :

"குறிப்பறிந் தேனுடல் உயிரது கூடிச்
 செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை
 மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான்
 கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே."
- 10, 277
(35)