கற்றும் என்பலன் கற்றிடு நூன்முறை | சொற்ற சொற்கள் சுகாரம்ப மோநெறி | நிற்றல் வேண்டும் நிருவிகற பச்சுகம் | பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே. |
(பொ - ள்) வேறுபாடற்ற ஒருமையுற்ற ஒடுக்கப் பேரின்பினைத் திருவருளால் பெற்ற மேலோர் அடைந்துள்ள சொல்லிறந்த தூய பெரும் பொருளே! சிறந்த நூல்களைக் கற்பதனால் மட்டும் எய்தும் பயன் என்? அந்நூல்களிற் சொல்லிய சொற்களால் பேரின்பத் தோற்றம் பிறக்குமோ? அவை கூறும் நெறிமுறையை விடாது கைப்பற்றி யொழுகி உறுதியாக நிற்றல் வேண்டும் (அப்பொழுதுதான் பேரின்பப் பெரும்பேறு கைகூடும்.) வேறுபாடற்ற ஒருமையுற்ற ஒடுக்கப்பேரின்பு : நிருவிகற்பசமாதி.
(36)
பெருமைக் கேயிறு மாந்து பிதற்றிய | கருமிக் கைய கதியுமுண் டாங்கொலோ | அருமைச் சீரன்பர்க் கன்னையொப் பாகவே | வருமப் பேரொளி யேயுன்ம னாந்தமே. |
(பொ - ள்) அருமை மிகுந்த மெய்யன்பர்க்கு ஆர்வமிக்க தாயொப்பவனே! தாயொப்பாக வரும் பேரின்பப் பேரொளியே! உன்மனையாற்றலின் மேலிடமே! பெருமையின் பொருட்டு இறுமாப்படைந்து குழறித்திரியும், கருமியாகிய தீவினையேனுக்கு நல்ல நிலையும் உண்டாகுமோ?
(வி - ம்.) உன்மனையாற்றல் என்பது சாந்தியதீதை எனப்படும். இஃதொடுங்குமிடம் சிவசாதாக்கியம். இது கருவிகரணங்களின் தொழிற்பாடுகள் ஒடுங்கிய நுண்மையான அளவுக் கடங்காத பேரொளிப்பிழம்பாய், உள்கும் உணர்வளவாய் விளங்கப்பட்டு எங்கும் நிறைவாயிருப்பது. உன்மனாந்தம் - பராற்பர நாத முடிவுமாம். தற்பெருமை - அகங்காரக் கூறு. கருமி - தீவினையாளி.
(37)
உன்ம னிக்குள் ஒளிர்பரஞ் சோதியாஞ் | சின்ம யப்பொரு ளேபழஞ் செல்வமே | புன்ம லத்துப் புழுவன்ன பாவியேன் | கன்ம னத்தைக் கரைக்கக் கடவதே. |
(பொ - ள்) உன்மனையாற்றலுக்குள் விளங்கிக் கொண்டிருக்கும் பேரொளிப் பெரும் பிழம்பாகிய அறிவுவடிவப் பொருளே! தொன்மையாகிய அழிவில்லாத முழுநிறை செல்வமே! இழிந்த மலத்திலுள்ள புழுவினையொத்த தீவினையேனின் கல்லினுங் கடிய மனத்தை உருக்கியருள்வாயாக.