சேய தாம்இந்தச் சீவத் திரளன்றோ. | ஆயும் பேரொளி யான அகண்டமே. |
(பொ - ள்) நின் திருவருளால் எல்லையின்றி யாங்கணும் பேரொளியாக நீ நின்றருளுமியல்பினை ஆய்ந்துணர்ந்து உறுதி கண்டோர் மாசணையாத தூயதாகிய நாலாநிலை அறிவென்று சொல்லப்படும் திருவருளாந் தாயும் நீயே, திருவடிப் பேரின்பத்தினைத் தந்தருளும் அப்பால்நிலை அறிவென்னும் நற்றந்தையும் நீ யென்று, மெய்ம்மை கூறுவர் என்றால், ஈண்டுக் காணப்படும் ஆருயிர்க் கூட்டங்கள் அனைத்தும் நின்னருட் பேணுதலில் நிற்கும் சேய்களாகும்.
நாலாநிலை - துரியம். அப்பால் நிலை - துரியாதீதம்.
(43)
அகண்ட மென்ன அருமறை யாகமம் | புகன்ற நின்தன்மை போதத் தடங்குமோ | செகங்க ளெங்குந் திரிந்துநன் மோனத்தை | உகந்த பேருனை ஒன்றுவர் ஐயனே. |
(பொ - ள்) முழுமுதற்றலைவனாம் ஐயனே! அரிய மறைகளனைத்தும் எல்லையில்லாது எங்கணும் நிறைந்த பொருளென்று எடுத்தோதும்; அதுபோல் திருமாமுறைகளாகிய செந்தமிழ்ச் சிவாகமங்களனைத்தும் அறுதியிட்டறைகின்றன. அத்தகைய நின்தன்மை அடியேன் முனைப்பால் எழும் சிற்றறிவினுள் அடங்குவதாமோ? உலகெலாந் திரிந்து உரையற்ற உயர்நிலையினை உன்திருவருளால் எய்தப் பெற்றோர் உன் திருவடியினை வந்து பொருந்துவர்.
அகண்டம் : கண்டிக்கப் படாதது; எல்லையற்றது. போதம் - உயிர் முனைப்பு; சீவபோதம்; சிற்றறிவு. புகன்ற-சொல்லிய. செகம் - உலகம். மோனம் - உரையற்ற நிலை; வாய்வாளாமை; வாய்பேசாமை.
(44)
ஐய னேஉனை யன்றி யொருதெய்வங் | கையி னால்தொழ வுங்கரு தேன்கண்டாய் | பொய்ய னாகிலும் பொய்யுரை யேன்சுத்த | மெய்ய னாம்உனக் கேவெளி யாகுமே. |
(பொ - ள்) ஐயனே! (சங்காரகாரணனாயுள்ள விழுமிய முழுமுதற்றெய்வமாகிய நீ தேவர் மூவர் மற்றுயாவர்க்கு மேலாம் முதல்வனாய் என்றும் பொன்றாதிருந்தருள்கின்றனை.) உன்னையல்லாமல் (உயிரினங்களில் நின் திருவாணை பெற்றுத் தேவராயுயர்ந்த) ஒரு தெய்வம் உண்டெனக் கொண்டு கையினாற் றொழுதற்கும் கனவினுங் கருதேன்; அடியேன் முழுப்பொய்யன்: ஆனாலும் (இங்ஙனஞ் சொல்லும் இது மெய்யுரையே) பொய்யுரையேன். தூய மெய்யனாகிய உனக்கு இவ்வுண்மை வெளியாகும். (இனம்பற்றி மற்றொரு தெய்வ முண்டென உள்ளத்தாற் கருதவும் உரையால் வாழ்த்தவும் செய்யேன் என்பதுங் கொள்க).