அடுத்த பேரறி வாயறி யாமையைக் | கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே. |
(பொ - ள்) நின் திருவடியினை மறவா நினைவால் உறவாகக் கொண்டு அடுத்தவர்களுடைய அறிவுக்கு அறிவாய் மேலோங்கி நின்று அவர்தம் அறியாமையை நீக்கிப் பேரின்பப் பெருவெள்ளத்து மூழ்குவிக்கும், விளக்கமிக்க மாணிக்க மலையே! அடியேன் எடுத்துள்ள இவ்வுடம்பு இறந்துபோகுமுன்னே என்னை நினக்குக் கொடுத்து உன்னைப் பெற்று உன்னைப் புணரும்படியான திருவருட்பேற்றினை அடியேன் கண்டு களிப்பனோ?
(வி - ம்.) கொடுத்த1 லென்பது, ஒருவர்தம் உடலும் பொருளும் உடையானுக்குரிய உடைமைகளாம். ஆவி அவன் திருவடிக்கடிமையாம் இம் மெய்ம்மையுணர்ந்து தமக்கு ஏதும் முதன்மை இன்றெனக் கொண்டு உடையானுக்கே முதன்மையெனக் கண்டு ஒழுகுதல். முதன்மை - சுதந்திரம். கொள்ளுதல் என்பது, அவனுக்குத் தாம் மீளா அடிமையெனும் வாய்மை கடைப்பிடித்துத் திருவடி மறவா நினைவுடன் உன்னடியேன் செய்பணிகள் உன் தொண்டே உன்னருளே உன்னடிக்கே ஒப்புவித்தேன் ஒர்ந்தெனக் கொண்டு சிவவாழ்வாய் வாழ்தல்.
(66)
குன்றி டாத கொழுஞ்சுட ரேமணி | மன்று ளாடிய மாணிக்க மேயுனை | அன்றி யார்துணை யாருற வார்கதி | என்று நீயெனக் கின்னருள் செய்வதே. |
(பொ - ள்) எக்காலத்தும் குறைவடையாத மிக்க செழுமை வாய்ந்த அறிவுப் பெருஞ்சுடரே! தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் மெய்யுணர்வுத் திருக்கூத்துச் செய்தருளும் மாணிக்கமே! உன்னையல்லாது அடியேனுக்கு உற்ற துணையாவார் யாவர்? உறவாவார் யாவர்? நிலைத்த புகலிடமாவார் யாவர்? அடியேனுக்கு அடிகளே! இன்னருள் செய்வது எக்காலத்து?
(67)
அருளெ லாந்திரண் டோர்வடி வாகிய | பொருளெ லாம்வல்ல பொற்பொது நாதஎன் | மருளெ லாங்கெடுத் தேயுளம் மன்னலால் | இருளெ லாம்இரிந் தெங்கொளித் திட்டதே. |
(பொ - ள்) திருவருள் முழுவதும் ஒருங்குதிரண்டு ஓர் ஒப்பில்லாத வடிவுகொண்டு, பொருளனைத்தும் தானாய்த்திகழ்கின்ற ஆக்கி அளித்து அழிக்கும் வன்மை வாய்ந்த பொன்னம்பலத்தின் கண் இடையறாது இன்பக்கூத்தினை இயற்றியருளும் என்னுயிர்த் தலைவனே! என்னுடைய மயக்கமுழுவதும் அகற்றியருளி அடியேன்
1. | 'மிண்டு மனத்தவர்.' 9. பல்லாண்டு 2. |