பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

370
மனக்கிலே சங்கள் தீர்ந்த மாதவர்க் கிரண்டற் றோங்குந்
தனக்குநே ரில்லா ஒன்றே சச்சிதா னந்த வாழ்வே.
    (பொ - ள்.) மனத்துன்பங்களுக்குரிய குற்றம் முழுதுமற்று இரண்டற்று நின்திருவடியிற் புணர்ந்துநிற்கும் நற்றவத்தோர்க்கு ஒப்பில்லாத ஒன்றாய் விளங்கும் உண்மையறிவின்ப வண்ண வாழ்வே! நின் திருவடிக்கு அடித்தொண்டு பூண்டு நின்பாலே பேரன்பு பெருக எளியேனுக்கு நீ நின்திருவருள் தோற்றந்தந்து அஞ்சேலென்று அமிழ்த மொழியளித்தருளு நாள் எந்த நாளோ?

(5)
வாழ்வென வயங்கி என்னை வசஞ்செய்து மருட்டும் பாழ்த்த
ஊழ்வினைப் பகுதி கெட்டிங் குன்னையுங் கிட்டு வேனோ
தாழ்வெனுஞ் சமய நீங்கித் தமையுணர்ந் தோர்கட் கெல்லாஞ்
சூழ்வெளிப் பொருளே முக்கட் சோதியே அமர ரேறே.
    (பொ - ள்.) திருவடிப்பேறாகிய சிறப்பினுக்கு வழிகாட்டாது மருள்நிறை பிறப்பினுக்கு வழிகாட்டும் தாழ்வான சமயங்களை விட்டு நீங்கி நின் திருவருளால் தம்மையுணர்ந்த செம்மைத் திருவாளர் அனைவர்கட்கும் வெளிப்பட்டருளும் மெய்யுணர்வுப் பொருளே! மூன்று திருக்கண்களையுடைய பேரொளிப் பிழம்பே! அமரர்கட்கு அரியேறனைய முதல்வனே! எளியேனை இதுவே வாழ்வென மயக்கித் தன் வயப்படுத்து ஆட்டுவிக்கும் ஊழ்வினைப் பகுதி யகன்று உன்திருவடியினைக் கிட்டும் பேறு அடியேனுக்கு வாய்க்குமோ? சமயங்கள் படிமுறை போன்றும், நடைவழிபோன்றும், பள்ளிவகுப்புப்போன்றும் சிற்றினத்தார் போன்றும், நீர் நிலைபோன்றும், ஊண்சுவை போன்றும், துயில்இன்பம் போன்றும், விளையாட்டுப் போன்றும் தங்கள்பால் தங்கினவர்களை நீங்கவிடுவதில்லை. அவற்றை நீங்கி முன்னேறி மேலே செல்லல் திருவருள் நாட்டமுடைய செவ்வறிவுடையார் கடனாகும்.

"ஆயத்துள் நின்ற அறுசம யங்களும்
 காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
 மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
 பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே"
-10. 1503. (6)
ஏறுவாம் பரியா ஆடை இருங்கலை உரியா என்றும்
நாறுநற் சாந்த நீறு நஞ்சமே அமுதாக் கொண்ட
கூறருங் குணத்தோய் உன்றன் குரைகழல் குறுகி னல்லால்
ஆறுமோ தாப சோபம் அகலுமோ அல்லல் தானே.
    (பொ - ள்.) அறவுணர்வுமிக்க ஆருயிர் வடிவமாகிய ஆனேற்றினைத் தாவிச்செல்லும் குதிரையாகவும், கலைமானின் தோலே ஆடையாகவும், எந்நாளிலும் நல்ல நறுமணங்கமழும் திருவெண்ணீறே சந்தனமாகவும், தேவர்கள் உய்யும் பொருட்டுக்கொண்ட கண்டாரைக் கொல்லும் பெருநஞ்சே உண்டு சாவாதிருக்கும் உணவாகவும்