(இதன்கண் ஒன்பது "சிவ" என்னும் செந்தமிழ் மந்திரம் அமைந்துள்ளன. இத் திருப்பாட்டைப் பன்னிருமுறை ஓத நூற்றெட்டுச் சிவமாம்.)
(பொ - ள்.) பேரொளிப் பிழம்பே! அனைத்திற்கும் வினைமுதற் காரணமாக வுள்ள தலைவனே! விலகி, விலகி, வருந்தி அழுது உடம்பெலாம் மயிர்பொடிப்ப, அழகிய நின்திருவடியை அடைந்தனன்; உனக்கே அடைக்கலமென்று கைகூப்பி, உள்ளம் உருகி உருகிக் கைபுனைந்தெழுதிய சித்திரப்பாவையை ஒத்து அசைவற்று அடியேன் நிற்கும்படி, அடிகள் அடியேனைத் தொடர்ந்து ஆட்கொண்டருளும் நாள் எந்நாளோ? எளியேனைக் கைவிட்டுவிடாதே.
(3)
ஆதியாய் நடுவாய் அந்தமாய்ப் பந்தம் | யாவுமற் றகம்புறம் நிறைந்த | சோதியாய்ச் சுகமா யிருந்தஎம் பெருமான் | தொண்டனேன் சுகத்திலே இருக்கப் | போதியா வண்ணங் கைவிடல் முறையோ | புன்மையேன் என்செய்கேன் மனமோ | வாதியா நின்ற தன்றியும் புலன்சேர் | வாயிலோ1 தீயினுங் கொடிதே. |
1. | 'ஐம்புல வேடரின்.' சிவஞானபோதம் நூற்பா. 8. |