மறந்து இவ்விடத்து நினதிருவடியினை மறவாத உறுதித் தன்மை அடியேனுக்கு உண்டாகுமோ?
(வி - ம்.) சிவபெருமான் தன்திருவடிப் பேறாம் விழுப்பயனை ஆருயிர்கள் எய்தும் பொருட்டு வழித்துணையாக மனைவிமக்கள் முதலிய குடும்ப வாழக்கையினைத் திருவருளால் மாயாகாரிய உடம் பொடுபடுத்தித் தந்தருளினன். அக் குடும்ப வாழக்கையினை வழித்துணையென்றெண்ணாது அதுவே விழுப்பயன் போலும் என மயக்கங்கொள்வது மினையென்னுங் குற்றமாம். அவ்வுண்மை வருமாறு :
| "அருத்த மும்மனை யாளொடு மக்களும் |
| பொருத்த மில்லைபொல் லாதது போக்கும் |
| கருத்தன் கண்ணுத லண்ணல்காட் டுப்பள்ளித் |
| திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே" |
| -5. 86-4 |
(2)
வரும்போம் என்னும் இருநிலைமை | மன்னா தொருதன் மைத்தாகிக் | கரும்போ தேனோ முக்கனியோ | என்ன என்னுள் கலந்துநலந் | தரும்பே ரின்பப் பொருளேநின் | தன்னை நினைந்து நெக்குருகேன் | இரும்போ கல்லோ மரமோஎன் | இதயம் யாதென் றறியேனே. |
(பொ - ள்.) (வேற்றுப் பொருள் போன்று) வருவதும் போவதும் ஆகிய இருநிலைகளுமின்றி என்றும் ஒருதன்மைத்தாகி மிக்க இனிமை தரும் கரும்பின்சாறோ, தேனோ, வாழை மா பலா என்னும் முக்கனிகளோ, என்று நின்திருவடியினை நினையுமாறு அடியேன் உணர்வினுட்கலந்து நன்மையினையே பெருக்கும் பேரின்ப மெய்ப்பொருளே, நின்னை நினைந்து நெஞ்சம் நெக்குருகேன். அதனால் அடியேன் நெஞ்சம் இரும்பின் தன்மையோ? கல்லோ? மரமோ? இன்ன தன்மைத்தென்று எளியேன் அறிகின்றிலேன்.
(3)
அறியுந் தரமோ நானுன்னை | அறிவுக் கறிவாய் நிற்கையினால் | பிறியுந் தரமோநீ என்னைப் | பெம்மா னேபே ரின்பமதாய்ச் | செறியும் பொருள்நீ நின்னையன்றிச் | செறியாப் பொருள்நான் பெரும்பேற்றை | நெறிநின் றொழுக விசாரித்தால் | நினக்கோ இல்லை எனக்காமே. |