பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

38

     "வடவனல்" என்பது பெட்டைக் குதிரையின் வடிவாய்ச் சிவபெருமானால் படைக்கப்பட்டுக் கடலின் நடுவில் நீரானது தன்னெல்லை கடவாது அமைந்து நிற்கும்படி அமைத்துவைக்கப்பட்டதொரு தீ.

     1. ஆழாழி கரையின்றி நிற்றல், 2. ஆலமமுதாகல், 3. கடலின் மீது வடவனல் நிற்றல், 4. அகிலகோடி நிற்றல், 5. மேரு வில்லாக வளைதல். இவ்வைந்தும் சிவபெருமானின் திருவாணை நேர்முகமாக நிகழ்த்தி யருளப்பட்டன.

     மேகங்கள் ஏழும் வானவர் கோனால் நிகழ்வது திருவாணை அவன் வழி நிகழ்த்தியதாகும். அகலிகை கல்லுரு நீங்கியதும் அங்ஙனமே. சித்தர்கள் செய்தியும் அங்ஙனமேயாம். இம்மூன்றும் முறையே தேவர்கள் தலைவனாலும், அவனினும் சிறந்த திருமால் எடுத்த பிறப்பினுள் ஒன்றாகிய இராமனாலும், மக்களுட் சிறந்த சித்தர்களாலும் நிகழ்ந்தன. மெய்ம்மை நோக்கின் அவையும் இறைவன் திருவாணை அவ்வவர்பால் தங்கிநின்று நிகழ்த்துவித்தனவேயாம்.

"நிறைமொழி மாந்தர்தம் ஆணையிற் கிளந்த
 மறைமொழி தானே மந்திர மென்ப."
- தொல். பொருள் - 490.
     ஈண்டு ஆணை என்பது இறைவன் திருவாணை. நிறைமொழி என்பது (திருவருள் நிறைந்த கொள்கலமாய் அம்மாந்தர் இருப்பதால்) அருள் நிறைந்த மொழி என்பதாம். நோய் போக்குவதற்கு மருந்தே முதற்காரணம், மருத்துவன் நிமித்தகாரணம். அதுபோல் திருவாணை முதற்காரணம், மாந்தர் துணைக்காரணம், திருவருள் நிமித்தகாரணம்.

     அகலிகை கல்லாய்ச் சமைந்ததற்கும் திருவாணையே காரணமென்ப. இவ்வுண்மை வருமாறு காண்க:

"அரசனுஞ் செய்வ தீசன் அருள்வழி யரும்பா வங்கள்
 தரையுளோர் செய்யில் தீய தண்டலின் வைத்துத் தண்டத்
 துரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
 நிரயமுஞ் சேரார் அந்த நிரயமுன் நீர்மை யீ தாம்."
- சிவஞானசித்தியார், 2. 2 - 29.
"அகலியை கல்ல தானாள் அரிபல பிறவி ஆனான்
 பகலவன் குலத்தில் தோன்றிப் பாரெலாம் முழுதும் ஆண்டு
 நிகரிலா அரசனாகும் சிலந்திநீ டுலகம் போற்றச்
 சகமதில் எலிதான் அன்றோ மாவலி ஆய்த்துத் தானே."
- சிவஞானசித்தியார், 2. 2 - 41.
     மனங் குவியாவழிச் சிவச்செறிவாகிய சிவயோக சமாதிகூடுதலருமை யென்னும் மெய்ம்மையினை வருமாறுணர்க: