பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

389
மனைவியார் திருப்பெயர் மணியம்மையார். இவ்வம்மையாரும் மிகுந்த சிவபத்தியுடையவர். இருவரும் நல்லமுறையாக மனையறம் பேணி வந்தனர். அவ்வம்மையாருக்குப் பிள்ளைப்பேற்றுக்காலம் நெருங்கியது. அதற்குத் துணையாதற் பொருட்டு நாகபட்டினத்துள்ள அவ்வம்மையாரின் அருமைத்தாயார் துணைக்கு வந்தனர். அப்பொழுது காவிரியாற்றில் பெருவெள்ளம் பெருகிக் கரைபுரண்டோடியது. அதனால் அவ்வம்மையார் இறைவனை வேண்டிக்கொண்டு தங்கினர். இங்கே மணியம்மையார் இறைவனை நாடிக்கொண்டு தாயின் துணையை நோக்கியிருந்தனர். இறைவனே தாயாக வந்து வேண்டுவ புரிந்தருளினன். மறுநாள் தாய்வந்து சேர்ந்தனள். செய்தி உணர்ந்து இருவரும் சிவபெருமான் திருவடியினைப் பரிந்து, பாடிப், பணிந்து பரவினர். சிவபெருமானும் விசும்பிடை அம்மையோடு விடையின்மேற் காட்சி கொடுத்தருளினன். அந்நாளிலிருந்து தாயுமானவர் என்னும் திருப்பெயர் சிவபெருமானுக்கு வழங்குவதாயிற்று.

(10)
காதில் ஓலையை வரைந்துமேற்
    குமிழையுங் கறுவிலே கருநீலப்
போது போன்றிடுங் கண்ணியர்
    மயக்கிலெப் போதுமே தளராமல்
மாது காதலி பங்கனை
    யபங்கனை மாடமா ளிகைசூழுஞ்
சேது மேவிய ராமகா
    யகன்தனைச் சிந்தைசெய் மடநெஞ்சே.
    (பொ - ள்.) அறியாமையோடு கூடிய நெஞ்சமே! காதிலணிந்துள்ள பொன்னோலையினை விலக்கி, குமிழம் பூவினை யொத்த நாசியினைச் சினந்து, காமனுக்குரிய கருநீலப்போது போன்று காணப்படும் மையலூட்டும் கண்ணினையுடைய பெண்கள் மயக்கும் மயக்கில் எப்பொழுதுமே அடியேன் சிக்கி உள்ளமும் உடலும் மெள்ளத் தளர்வுற்று அழியாமல் மிக்க தனிக் காதலையுடைய உமையம்மையாரை ஒரு பக்கத்திலே உடையவனை, அழிவில்லாதவனை, மாடமாளிகைகளாற் சூழப்பட்ட திருச்சேதுவின்கண் வீற்றிருந்தருள்கின்ற இராமநாதனை இடையறாது நினைவாயாக.

     (வி - ம்.) அபங்கன் - அழிவில்லாதவன், சேது என்பது இராமர் இலங்கைக்குப் போகும் போது கட்டப்பட்ட நீர்க்கடப்பாகிய பாலம் என்ப.

(11)
அண்டமுமாய்ப் பிண்டமுமாய் அளவிலாத
    ஆருயிர்க் கோருயிராய் அமர்ந்தாயானால்
கண்டவரார் கேட்டவரார் உன்னாலுன்னைக்
    காண்பதல்லால் என்னறிவாற் காணப்போமோ