(பொ - ள்.) ஆருயிர்கள் உய்தற்பொருட்டு முதல்வன் திரு வருள்வடிவாகத் திகழ்ந்தருள்வன்; அத்தகைய திருக்கோலங்கள் ஏழென்ப. அவ்வேழும் பள்ளி வகுப்புப்போல் ஒன்றனுக்கொன் றுயர்வாய்ச் செந்தமிழ்த் திருமாமறை வழியாக வழிபடற்கமைந்துள்ளன. அவ்வேழின் கண்ணும் செய்யப்படும் வழிபாடு படிமுறை வழிபாடென மறைகள் முழங்குகின்றன. அதனால் தொழப்படுந் தெய்வம் சொல்லுமிடத்து ஒன்றேயாம். உடலின் உறுப்புப் போன்று அவ்வொன்றன் திருக்கோலமே பலவார் இவ்வுண்மை தெளிதலால் அடியேனுக்கு முனும் பின்னும் வருவதாகிய வழிக்கு மயக்கமில்லை. தெளிவின் முன்னிலையாகக் காணப்படும் உன்னைச்சார்ந்து அடியேனுந் தெளிவெய்தி நிற்கின்றேன்.
(வி - ம்.) ஆசான் ஆண்டான் அருளோன், எழுத்து ஓசை, அன்னை அத்தன் எனத் தூமாபை மெய்க்கண் காணப்படும் துணைவன் எழுந்தருளத், தாமம் தனியிருக்கைச் சார்பு ஏழாகும். இவ்வேழும் முறையே சுத்த வித்தை, ஈசுரன், சதாசிவம், விந்து, நாதம், சத்தி, சிவன் எனவுங் கூறுப. முதல்வன் யாண்டும் ஒருவனே என்னும் உண்மை வருமாறு :