(பொ - ள்.) எத்தனைக்கீடாக ஆருயிர்கள் பிறக்கும் பிறப்புக் கோர் எல்லையில்லை; அதுபோன்றிறப்புக்கும் அளவில்லை; எளியேனுக்கு இதுவரையமைத்தருளிய பிறப்பின் கணக்கனைத்தும் அருவுருவாம் நீயே அறிந்தருள்வை; தனித்து விளங்கும் அறிவில்லாத எளியேன் அறிகில்லேன்; ஐயோ! அடியேனுடைய சித்தமாகிய உள்ளமும், வாக்காகிய உரையும், தேகமாகிய உடலும் உன்னுடையனவே, எளியேன் இன்னம் பிறப்பதென்றால் அறவே தாங்க முடியாததாகும்; அதனால் அடியேனை நின் அடிமைக்குடியாக இவ்விடத்து வைத்தருளுதல் வேண்டும். மறைமுடிவில் வீற்றிருந்தருளும் பெரிய மெய்ப்பொருளே.
(37)
வான்பொரு ளாகி எங்குநீ யிருப்ப
வந்தெனைக் கொடுத்துநீ யாகா
தேன்பொருள் போலக் கிடக்கின்றேன் முன்னை
இருவினை வாதனை யன்றோ
தீன்பொரு ளான அமிர்தமே நின்னைச்
சிந்தையிற் பாவனை செய்யும்
நான்பொரு ளானேன் நல்லநல் அரசே
நானிறந் திருப்பது நாட்டம்.
(பொ - ள்.) மேலான மெய்ப்பொருளே ஆகி எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும் நீ நீங்காது நிறைந்திருக்கவும், திருவருளால் நின் திருவடிக்கு ஆளாகி அடியேன் வந்து என்னுடைய ஆவியும், உடலும், உடைமை எல்லாமும் நின்திருவடிக்கண் பூவொடு புனலொழுக்கி உளமார ஒப்புவித்தேன். அங்ஙனம் ஒப்புவித்தும் நினக் கடிமையாம் முறையெனப்படும் நின்னைப் போன் றறிவுப்பொருள் ஆகாதேன் போன்று அறிவில் பொருளாய்க் கிடக்கின்றேன். அதற்குக் காரணம் அடியேனுடைய பலபிறப்பிற் செய்துபோந்த இருவினைப் பழக்க இயல்பேயாம்; உண்ணற்குரிய பொருளான அமிழ்தமே, நின் திருவடியினைத் தீரா நினைவாம் சிறப்பெனப்படும் பாவனையினைச் செய்யும் அடியேன் ஒரு பொருளாம் தன்மையினை ஆயினேன் அல்லன்; நல்ல பெருவேந்தே! அடியேனுடைய எண்ணம் எளியேனுக்கு முதன்மை ஏற்றி முனைபுடனிருக்கும் சுதந்தரமற்று இருத்தல் வேண்டும் என்பதே. அதுவே அடியேன் முழு விழைவும் ஆகும்.