பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

424
கையுஞ் சிரமிசைக் கூப்பிநின் றாடிக் கசிந்துருகி
உய்யும் படிக்கருள் செய்வதென் றோபுலி யூரத்தனே.
    (பொ - ள்.) தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் வீற்றிருந்தருளும் தந்தையே, நின் திருவடிக்கு ஆளாக்குதற்குரிய நற்றவம் ஒரு சிறிதும் புரிந்திலேன்; மேலும் அடியேன் நின்திருவடிக்கு அன்றலர்ந்த நாண்மலர் கொய்து, செந்தமிழ்ப் போற்றிமறை புகன்று மெய்யன்பர்களுடன் கூடிப் பூத் தூவிக் கையுந்தலைமிசை ஏறக்கொண்டு கும்பிடுதலும் ஆடுதலும், கசிந்துருகி உய்தற்கு வேண்டுவனவும் செய்திலேன். இவையெல்லாம் நின் திருவருளால் செய்து உய்யும்படிக்கு நீ அடியேனுக்கு அருள்புரிவது எந்நாளிலோ? (விரைந்தருளவேண்டுமென்பது குறிப்பு.)

(3)
அத்தனைச் சிற்றம் பலவனை யென்னுயி ராகிநின்ற
சுத்தனைச் சுத்த வெளியா னவனைச் சுகவடிவாம்
நித்தனை நித்த நிராதார மாகிய நின்மலனை
எத்தனை நாள்செல்லு மோமன மேகண் டிறைஞ்சுதற்கே.
    (பொ - ள்.) மனமே! எளியேன் உயிர்க்குயிராம் அப்பனை, தில்லைச்சிற்றம்பலத்தே நடித்தருள்பவனை, அடியேன் உயிரிற் கலந்து உயிராகவே திகழ்கின்ற தூயோனை, தூய அருள்வெளியாக அமர்ந்துள்ளவனை, பேரின்பப் பெருவடிவாம் பெருமானாகி அழிவில்லாதவனை, என்றும் தனக்கொரு பற்றுக்கோடில்லாது நிற்கும் பழையோனை, என்றும் உள்ளதாகிய ஒருவனை, இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவனை, அடியேன் உணர்வினுக்குணர்வாய்ச் சென்றிறைஞ்சும் பேறு கிடைப்பதெந்நாளோ?

     (வி - ம்.) இத் திருபாட்டின்கண் 1. அத்தனை 2. சிற்றம்பலவனை 3. சுத்தனை 4. வெளியானவனை 5. நித்தனை 6. நின்மலனை என ஆறுவகையாகச் சிவபெருமான் அழைக்கப்படுகின்றனன். சிவபெருமான் ஆருயிர்களின் பொருட்டுத் திருவருளால் ஆண்டாண்டுக் கொள்ளும் திருக்கோலம் நீங்கும் நிலை ஆகிய தடத்தமெனப்படும். இந் நீங்கு நிலைக்காட்சி வேறாய் நின்று காணப்பெறும் வடிவமெய்க்காட்சியாகும்.

    இக் காட்சியினைக் கண்டு கைதொழுதபின் உணர்வின் நேர்பெற வரும் உண்மைக்காட்சி புலனாம். அக் காட்சி ஒன்றாய் வேறாய் உடனாய்ப் புணர்ந்து நின்று உணர்வினால் உணரும் இன்ப உண்மைக் காட்சியாகும். இத் திருக் காட்சியினையே நம் தாயுமானச் செல்வர் வேண்டியருளுகின்றனர். இக் காட்சிகளின் உண்மை வருமாறு : அருவாம் ஒலியறிய ஆக்கும் எழுத்தின், உருவாம் நிலைதடத்தம் ஓர் என்பதனாலும் உணரலாம்.

"உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
    போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
 அணையும் ஐம்பொறி அளவினும்
    எளிவர அருளினை எனப்போற்றி