நடுவே என்னுள்ளம் கிடந்து மயக்குற்று. விம்மி இரவுப்பொழுதிலும் பகற்பொழுதிலும் துன்பந்தாங்கவொண்ணாது வாய்விட்டு அலறுவேன். அல் - இரவு.
(29)
அறியாத என்னை அறிவாயும் நீயென் றகம்புறமும் | பிறியா தறிவித்த பேரறி வாஞ்சுத்தப் பேரொளியோ | குறியாத ஆனந்தக் கோவோ அமுதருள் குண்டலியோ | சிறியேன் படுந்துயர் கண்டுகல் லால்நிழற் சேர்ந்ததுவே. |
(பொ - ள்.) புல்லறிவாளனாகிய யான்படுகின்ற துயரினைக்கண்டு கல்லாலின் நிழலில் எழுந்தருளி வந்தது, எவராலும் அறியக்கூடாத எளியேனை அறிகின்றவனும் தேவரீர் என்று உள்ளும் வெளியும் எள்ளில் எண்ணெய் போன்று நீங்காதிருந்து அறிவித்தருளிய பேரறிவாகிய திருவருட்பெருஞ் செழுஞ்சோதியோ, எண்ணவொண்ணாத பேரின்பப் பெருவாழ்வோ, பேரின்பப் பெருவாழ்வைப் பதித்தருளும் சிவபெருமானின் அறிவாற்றலாகிய சிவையோ, (திட்டமாய் எளியேன் அறிந்திலேன் என வினவுமுறையில் அமைந்துள்ளது இத் திருப்பாட்டு) குண்டலிசத்தியினை நேரே இயக்கும் சிவையினைக் குண்டலியோ என்றனர்.
(30)
எல்லாம் உதவும் உனையொன்றிற் பாவனை யேனுஞ்செய்து | புல்லா யினும்ஒரு பச்சிலை யாயினும் போட்டிறைஞ்சி | நில்லேன்நல் யோக நெறியுஞ்செ யேன்அருள் நீதியொன்றுங் | கல்லேன்எவ் வாறு பரமே பரகதி காண்பதுவே. |
(பொ - ள்.) மேலாம் தனிமுதற் பொருளே! அனைத்தையும் அருளினால் உதவும் நின்திருவடியினை ஏதாவதொரு திருக்கோலத் திருவுருவின்கண் அன்பானினைந்து அறுகம்புல்லாவது ஏனைப் பச்சிலையாவது கொண்டு மேலாம் சீலத்தொண்டினைத் திகழப்புரிந்து, போற்றித் தனித்தமிழ்ப் போற்றிமறை புகன்று வழிபடுவதாகிய நோன்பும், வழிபட்ட திருவினை ஒல்லும் வகை உள்ளத்தின்கண் ஓவாது அத் திருவுருவத்திருக்கோலத்தினை உள்குதலாகிய செறிவெனப்படும் யோகமும் ஆகிய அருளறமுறைகள் ஒரு சிறிதும் கற்றுமில்லேன்; மேலாம் தனிமுதற்பொருளே எவ்வாறு சிவகதியினைச் சேர்ந்துய்வது?
(31)
ஒன்றுந் தெரிந்திட இல்லைஎன் னுள்ளத் தொருவஎனக் | கென்றுந் தெரிந்த இவைஅவை கேள்இர வும்பகலுங் | குன்றுங் குழியும் வனமும் மலையுங் குரைகடலும் | மன்றும் மனையும் மனமாதி தத்துவ மாயையுமே. |
(பொ - ள்.) அடியேன் உள்ளத்தில் மிக்குஓங்கி வீற்றிருந்தருளும் ஒப்பில்லாத முதல்வனே! (நின்னருள் அகமுகத்தில் உன்னையுணர்த் தாமையால்) ஒளி பொருந்தா விழிபோன்று உண்முகப்பொருள் ஒன்றும் புலனாகவில்லை; எளியேனுக்குப் பின்புலனாம் பொருள்கள