யாவையென்றால் புறத்தே காணப்படும், சிறுமலையும், பெருங்குழியும் அடர்ந்தகாடும், மலையும், ஒலிக்கின்ற கடலும் இவ்வகையாக விரிந்திருக்கும் தூவாமாயையுமேயாம்.
(32)
பழுதுண்டு பாவையர் மோக விகாரப் பரவையிடை | விழுகின்ற பாவிக்குந் தன்தாள் புணையை வியந்தளித்தான் | தொழுகின்ற அன்பர் உளங்களி கூரத் துலங்குமன்றுள் | எழுகின்ற ஆனந்தக் கூத்தனென் கண்மணி யென்னப்பனே. |
(பொ - ள்.) "தொழுது தூமலர் தூவித் துதித்து, அழுது காமுறும்" அன்பருள்ளங்கள் மிக்களிப்பினைக் கொள்ளும் பொருட்டுத் திருவருள் விளக்க மிக்க தில்லைத்திருச்சிற்றலம்பத்தின்கண்ணே நடித்தருளுகின்ற பேரின்பப் பெருங்கூத்தன் அடியேன் கண்மணி, எளியேன் அப்பனே ஆற்றாப்பெருந்துன்பம் அடைந்து, மயக்கும் பெண்கள்பாற் கொள்ளும் மயக்கமாய்ப்1 பெருங்கடலில் காமுற்று விழுந்து அழுந்தும் இயல்புடைய கொடியேனுக்குத் தன் திருவடிப் புணையினைத் தந்தருளினன்.
(33)
அழுக்கார்ந்த நெஞ்சுடை யேனுக்கை யாநின் அருள்வழங்கின் | இழுக்காகு மென்றெண்ணி யோஇரங் காத இயல்புகண்டாய் | முழுக்காத லாகி விழிநீர் பெருக்கிய முத்தரெனுங் | குழுக்காண நின்று நடமாடுந் தில்லைக் கொழுஞ்சுடரே. |
(பொ - ள்.) எக்காதலுமின்றி நின்திருவடி முழுக் காதலினை விழுப்பமுறக்கொண்ட மெய்யன்பர்கள் விழிநீர் பெருக்கிய வீடுபேற்றினரென்னும் திருக்கூட்டத்தினராவர்; அவர்கள் கண்டு கும்பிட்டுய்யும்படி, பொன்மன்றின்கண் திருக்கூத்தியற்றியருளும் தில்லையருட் பெருஞ்சுடரே! வஞ்சக நெஞ்சுடைய எளியேனுக்குத் தலைவனே! நின்திருவருளினை வழங்கின் இழுக்குண்டாமென்று திருவுள்ளங் கொண்டோ இரங்காதிருந்தருள்வது?
(34)
ஆலம் படைத்த விழியார்கள் மால்கொண்ட டவர்செய்இந்த்ர | சாலம் படைத்துத் தளர்ந்தனை யேயென்றுந் தண்ணருள்கூர் | கோலம் படைத்துக்கல் லாலடிக் கீழ்வைகுங் கோவுக்கன்பாங் | காலம் படைக்கத் தவம்படை யாதென்கொல் கல்நெஞ்சமே. |
(பொ - ள்.) (வாலறிவன் நற்றான் நாடாத்தன்மையா லாகிய நயமில்) கல்நெஞ்சமே, நஞ்சமைந்த விழியினையுடைய மயக்கமே செய்யும் இயல்பு வாய்ந்த பெண்கள் செய்யும் கண்கட்டு வித்தையெனப்படும் இந்திரசாலத்துக்குள்ளாகி உள்ளந்தளர்ந்து உடல்வாடினையே, எந்த நாளினும் தண்ணிய திருவருளினைப் புரிந்தருளும் திருக்கோலங் கொண்டு
1. | 'பொருந்து'. 8. அற்புதப்பத்து, 4. |