பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

439
நினையும் நினைவும் நினையன்றி யில்லை நினைத்திடுங்கால்
வினையென் றொருமுதல் நின்னையல் லாது விளைவதுண்டோ
தனையுந் தெளிந்துன்னைச் சார்ந்தோர்க ளுள்ளச்செந் தாமரையாம்
மனையும்பொன் மன்றமும் நின்றாடுஞ் சோதி மணிவிளக்கே.
    (பொ - ள்.) நின்திருவருளால் தன் உண்மையினைத் தெளிந்து உன் திருவடியினைச் சேர்ந்தோர்களுடைய தூய உள்ளமாகிய செந்தாமரையனைய மனையும் தில்லைத் திருச்சிற்றம்பலமாகிய பொன் மன்றமும் 1 நீ நின்றாடும் இடமாகக் கொண்டு ஆடியருளும் பேரொளிப் பெருமணி விளக்கே! அடியேன் எண்ணும் எண்ணம் அனைத்தும் நின் திருவடியை யன்றிப் பிறிதொன்றுமில்லை; அங்ஙனம் நினைக்குமிடத்து அடியேனின் இருவினை யென்றொரு முதல் நின் திருவாணையின்றி விளைவதுண்டோ? (விளையாதென்பதாம்.)

(39)
உள்ளத் தையுமிங் கெனையுநின் கையினில் ஒப்புவித்தும்
கள்ளத்தைச் செய்யும் வினையால் வருந்தக் கணக்குமுண்டோ
பள்ளத்தின் வீழும் புனல்போற் படிந்துன் பரமஇன்ப
வெள்ளத்தின் ழூழ்கினர்க் கேயெளி தாந்தில்லை வித்தகனே.
    (பொ - ள்.) இயல்பாகவும் எளிதாகவும் பள்ளத்தில் பாய்ந்து விழும் வெள்ளம் போன்று அமைந்து மேலாம் நின்திருவடிப் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கிய மெய்யடியார்கட்கு எளிதாக இன்புறுத்தியருளும் தில்லைத் திருச்சிற்றம்பல மேய வியத்தகு திறல்சேர் வித்தகனே! அடியேன் நெஞ்சத்தையும் அடியேனையும் இங்குத் திருவருளால் நின் திருக்கையின்கண் முற்றாக ஒப்புவித்துள்ளேன். அங்ஙனமிருந்தும் வஞ்சத்தைச் செய்து பிறப்பில் புகுத்துவதாகிய வினையினால் அடியேன் வருந்தியிட முறையுண்டோ? (இன்றென்க.)

(40)
கள்ளம் பொருந்தும் மடநெஞ்ச மேகொடுங் காலர்வந்தால்
உள்ளன் பவர்கட்குண் டோஇல்லை யேயுல கீன்றஅன்னை
வள்ளம் பொருந்து மலரடி காணமன் றாடும்இன்ப
வெள்ளச்செம் பாதப் புணையேயல் லாற்கதி வேறில்லையே.
    (பொ - ள்.) வஞ்சனை பொருந்திய அறியாமை வயப்பட்ட மனமே! கொடுமை வாய்ந்த காலர் வந்துற்றபோது, அவர்களுக்கு உள்ளன்பு உண்டோ? ஒரு சிறிதும் இல்லையே! அனைத்துலகினையும் பெறாது பெற்றெடுத்த அன்னையாகிய உமைப் பெருமாட்டியார் உலகுய்யும்படி கண்டுகளிக்க மன்றத்தாடும் வள்ளம் போன்று காணப்படும் செந்தாமரை மலரையொத்த இன்பத் திருவடிப் புணையை யல்லாது வேறு புகலிடம் இல்லையே?

(41)
 1. 
'விண்ணினார்மதி'. 5. 46 - 5.