பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

441
எல்லாஞ் சிவன்செயல் என்றறிந் தாலவன் இன்னருளே
அல்லாற் புகலிடம் வேறுமுண் டோஅது வேநிலையா
நில்லாய் உன்னால்தமி யேற்குக் கதியுண்டிந் நீள்நிலத்தில்
பொல்லா மயக்கத்தி லாழ்ந்தாவ தென்ன புகல்நெஞ்சமே.
    (பொ - ள்.) வையத்தின்கண் நிகழ்வன யாவும் சிவன் திருவருட் செயலே என்று அருளால் உணர்ந்தால், அவன் திருவருளே நிலைபெற்ற புகலிடமாவதன்றி வேறும் உண்டாமோ? (எனவே) அதுவே மாறா நிலையாகக் கொண்டு நெஞ்சமே உறுதியாக நிற்பாயாக. (அங்ஙனம் நிற்பையாயின்) வேறு துணையில்லாத் தமியேனுக்கு நின்னால் இப் பேருலகில் நல்ல கதியுண்டாகும். அங்ஙனமின்றி இவ் வுலகிடைத் தோன்றும் கொடுமை மிக்க மயக்கத்தினில் அழுந்தி உழல்வதால் அடையும் பயன் யாது? (நெஞ்சே) கூறுவாயாக. எல்லாஞ் சிவன் செயலென்னும் உண்மை வருமாறு :

"எவ்விடத்தும் இறையடியை யின்றியமைந் தொன்றை
    யறிந்தியற்றி யிடாவுயிர்கள் ஈசன் தானுஞ்
 செவ்வீதினில் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து
    சேட்டிப்பித் தெங்குமாய்ச் செறிந்து நிற்பன்
 இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா
    இவற்றினுக்கம் முதலெழுத்துக் கெல்லாமாய் நிற்கும்
 அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லான்நாம்
    அரனடியை யகன்றுநிற்ப தெங்கே யாமே"
- சிவஞானத்தியார்; 11. 1 - 1.
(45)
ஒளியே ஒளியின் உணர்வே உணர்வின் உவகைபொங்குங்
களியே களிக்குங் கருத்தே கருத்தைக் கவளங்கொண்ட
வெளியே வெளியின் விளைசுக மேசுகர் வீறுகண்டுந்
தெளியேன் தெளிந்தவரைப் போற்றிடேன் என்ன செய்குவனே.
    (பொ - ள்.) தனிப் பெருஞ்சுடரே, அச் சுடரினுள்ளுறையாகிய உணர்வே, ஆருயிர்களின் உணர்வினுள் விழைவு மிகுகின்ற களிப்பைத் தருகின்ற இனிமைப் பொருளே, அதனால் இன்புறும் கருத்தே, கருத்தினை முற்றும் கவர்ந்து தன்வண்ணமாக்கும் அருளறிவுப் பெருவெளியே, அவ்வறிவுப் பெருவெளியின்கண் ஊற்றெடுத்து உண்பிக்கும் பேரின்பமே, அவ்வின்பத் தாழ்ந்த சுகமுனிவர்தம் மிக்க பெருமையினை நூல்கள் வாயிலாக உணர்ந்தும், உண்மை தெளிந்திலேன்; தெளிந்த சிவனடியாரைப் போற்றிப் புகழ்ந்து தொழுதிலேன்; யாது செய்குவேன்?

     (வி - ம்.) வியாசருக்கும், கிருதாசி என்னும் வானுலகப் பொருட் பெண்ணுக்கும் பிறந்தவர் சுகர் என்னும் முனிவர். இவர் கிளியுருவினுடன்