பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

445
அடையார் புரஞ்செற்ற தேவேநின் பொன்னடிக் கன்புசற்றும்
படையாத என்னைப் படைத்திந்தப் பாரிற் படர்ந்தவினைத்
தடையால் தளையிட்டு நெஞ்சம்புண் ணாகத் தளரவைத்தாய்
உடையாய் உடைய படியன்றி யான்செய்த தொன்றிலையே.
    (பொ - ள்.) அறத்தொடு பொருந்தாத முப்புரத்தை நகைத்து எரித்தருளிய பெருந்தெய்வமே, நின் பொன்போலும் திருவடியின் கண் ஒரு சிறிதும் அன்பு கொள்ளாத எளியேனை நீ பிறப்பித்தருளி மிக விரிந்த இந்த நிலவுலகத்தில் விட்டு, விரிந்த இருவினைத் தடையாகிய விலங்கினைப் பூட்டி நெஞ்சம் புண்ணாகத் துன்புற்றுத் தளரும்படியாக வைத்தருளினை; ஆருயிர்களை அடிமையாகவும், ஏனையவற்றை உடைமையாகவும் கொண்டு திகழும் உடையவனே, நீ திருவுள்ளங் கொண்டபடி யல்லாமல் அடியேன் செய்தது ஒன்றுமில்லையே.

     (வி - ம்.) இறைவன் படைப்புக் காலத்தில் மலநீக்கத்தின்பொருட்டு அம் மலத்தின் வன்மைக்கேற்றவாறு வினைபுரியத் தக்க பருவுடலைக் கொடுத்தருள்வன். அது பிறப்புத்தோறும் மாறுதலெய்தி வளர்ச்சியுற்று வேறுபடும். ஆனால் நுண்ணுடம்பு மாறாது எல்லாவுயிர்க்கும் யாண்டும் ஒன்றுபோல் இருக்கும். இறைவன் திருக்குறிப்பால் எல்லாம் நிகழும் என்பது ஆசிரியன் நற்றுணையால் - மாணவன் படிப்பு நிகழ்வது போன்று நீங்காத் துணையாக நிற்கும் அத்துணையேயாம். படிப்பதும் படியாது நடிப்பதும் மாணவனைப் பொறுத்திருப்பது போன்று முறையே இறைபணி நிற்பதும் அங்ஙனம் நில்லாது இருவினை புரிவதும் ஆருயிர்களைப் பொறுத்ததேயாம்.

(55)
ஆடுங் கறங்குந் திரிகையும் போல அலைந்தலைந்து
காடுங் கரையுந் திரிவதல் லால்நின் கருணைவந்து
கூடும் படிக்குத் தவமுய லாத கொடியர்எமன்
தேடும் பொழுதென்ன செய்வார் பரானந்த சிற்சுடரே.
    (பொ - ள்.) எங்குமிலாத என்றும் அழியாத மிக மேலான பேரின்பமும், பேரறிவுப் பெருஞ்சுடரும் வடிவமான பெருமானே, வானிடத்தில் ஆடித்திரியுங் காற்றாடியும், குயவன் கைக்கொள்ளும் திரிகையும் போன்று அடியேன் அங்கும் இங்குமாக அலைந்து அலைந்து காட்டினிடத்தும், கரையோரமுள்ள ஊர்களினிடத்தும் திரிந்து துன்புற்று ஓய்ந்ததல்லாமல் நின்னிற்பிரியா நின்திருவருள் வந்து கூடும்படி முயன்று நற்றவம்புரியாத கொடியோர் காலமுடிவில் நமன் கடுகிவந்து முடுகித் தேடுங்கால் என்ன செய்குவர்? (செய்வதேது மின்றித் துன்புறுவர்.)

(56)
கற்றும் பலபல கேள்விகள் கேட்டுங் கறங்கெனவே
சுற்றுந் தொழில்கற்றுச் சிற்றின்பத் தூடு சுழலின்என்னாங்
குற்றங் குறைந்து குணமே விடுமன்பர் கூட்டத்தையே
முற்றுங் துணையென நம்புகண் டாய்சுத்த மூடநெஞ்சே.