பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

455
     (வி - ம்.) முழுநீறு பூசிய முனிவர் திருவருளால் அந் நீறணிவ தன்முன் பொருவருந் திருநீறுந் தாமும் பொருந்திப் புணர நிற்கும் நிலையில் வேறாக நிற்பர். அணிந்தபின் எள்ளிய எண்ணெய்போல எங்கணும் வெண்ணீறாகக் காணப்பட்டு அவரும் வெண்ணீற்றினுள் அடங்கி வெண்ணீறாகவே நிற்பர். இதுவே சுத்தாத்துவிதமாம் மெய்ப்புணர்ப்பின் உண்மை. பேருயிரும் ஆருயிரும், முறையே தாங்கு நிலையும் தாங்கப்படு நிலையும் வாய்ந்த அறிவுடையன. இதனை மீநுண்ணறிவும் நோன்மையறிவும் எனக்கூறலாம். இவ்வுண்மை வருமாறு :

"அறிவிக்க அறித லானும் அழிவின்றி நிற்ற லானும்
 குறிபெற்ற சித்துஞ் சத்துங் கூறுவ துயிருக் கீசன்
 நெறிநித்த முத்த சுத்த சித்தென நிற்பன் அன்றே
 பிறவிப்பன் மலங்க ளெல்லாம் பின்னுயிர்க் கருளி னாலே."
- சிவஞானசித்தியார். 7 - 3 - 3.
    மீநுண்மை - அதிசூக்கும(சித்து). நோன்மை - பெருமை; பருமை. நோன்மை-தூலசித்து. மீ நுண்மை காட்டாம் மிளிர்நோன்மை காணுவதாம், தாம்பிரியாப் பேற்றினிலுந் தான்.

(16)
வேத முதலாய் விளங்குஞ் சிவவடிவாம்
போத நிலையிற் பொருந்தாமல் - ஏதமிகு
மோகாதி அல்லலிலே மூழ்கினையே நெஞ்சேஇத்
தேகாதி மெய்யோ தெளி.
     (பொ - ள்.) நெஞ்சமே! முழு முதல்வன் மறைமுதலாக விளங்குகின்றனன்; ஆருயிர்கள் கட்டுநீங்கி உய்யும்பொருட்டு ஆண்டாண்டுத் திருவருட் கோலங்கள் பல கொண்டருள்கின்றனன்; அவ்வனைத்தும் பேரறிவுப் பெருநிலையேயாகும். அத்தகு நிலையிற் பொருந்தாமல், பிறப்பிறப்புக் குற்றங்களே மிகுவதற்கு ஏதுவாகிய பெருமயக்க முதலிய நீங்காத் துன்பங்களில் மூழ்கி அழுந்தினையே, இவ்வுடல் முதலிய மாயாகாரியப் பொருள்கள் தோன்றியொடுங்குகின்ற நிலையிலாப் பொருள்களாவ தன்றி என்றும் ஒன்றுபோல் அழிவின்றி நிற்கும் நிலையுடைப் பொருள்களோ? தெளிவாயாக.

(17)
நோக்கற் கரிதான நுண்ணியவான் மோனநிலை
தாக்கற் குபாயஞ் சமைத்தபிரான் - காக்குமுயிர்
அத்தனைக்கும் நானடிமை ஆதலினால் யானெனதென்
றித்தனைக்கும் பேசஇட மில்.
     (பொ - ள்.) சுட்டிக்காண்பதற்கு அரியதான நுண்ணிய மிக மேலான மோன நிலையினை அடைதற்கு வழிவகைகளை அமைத்தருளிய சிவபெருமான் தன் திருவருளால் யாண்டும் காக்கப்படுவனவே ஆருயிர்கள் அனைத்தும். அங்ஙனமிருப்பதால் அடியேன் சிவபெருமானுக்கு அடிமையாம் முறையால் அவ்வுயிர்களுக்கும் அடிமையே. அவ்வுண்மை கடைப்பிடித்தால் எளியேனுக்கு யான் எனது என்னும் செருக்கு