பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

456
எய்துவதற்கு ஏது உண்டாகுமோ? (உண்டாகாது-) யான் எனது எனப் பேசுவதற்கும் இடமின்றென்க.

     (வி - ம்.) ஒருவன் அறியாமை வயப்பட்டுத் தனக்கு யாண்டும் இல்லாத முதன்மையினைத் தன்மேல் ஏறட்டுக் கொள்வதாலும், ஆண்டவன் தன்பால் தன்னயத்தின் பொருட்டு ஒப்புவித்த இரவலுடைமைகளைத் தன் உடைமைகளென மயக்கங்கொண்டு நிற்பதனாலுந்தான் யான் எனதென்னும் செருக்கு முனைக்கும். அவன் தன்னை ஆண்டானுக்கு அடிமையென்னும் மெய்ம்மையுணர்ந்தவிடத்து ஒளிமுன் இருள்போல் செருக்கு முனையாதொழியும். ஆண்டாற்கடிமை அனைவர்க்கும் அடிமையாகுமுண்மை வருமாறு :

"தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
 எம்மை உடைமை எமையிகழார்-தம்மை
 உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்
 புணராமை கேளாம் புறன்."
- சிவஞானபோதம், அவையடக்கம்
     ஒரு நல்லாசான்பால் மெய்ம்மையாக அடிமை பூண்டொழுகு நன்மாணவன் அவ்வாசானைச் சார்ந்தார் அனைவருக்கும் அங்ஙனமே தான் அடிமை என்று கூறிக்கொள்வதில் பெருமையினையே அடைவன். இது மேலதற்கொப்பாகும்.

(18)
ஒன்றுமற நில்லென் றுணர்த்தியநம் மோனகுரு
தன்துணைத்தான் நீடூழி தாம்வாழ்க - என்றென்றே
திக்கனைத்துங் கைகுவிக்குஞ் சின்மயராந் தன்மையர்க்கே
கைக்குவரும் இன்பக் கனி.
     (பொ - ள்.) "சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்" 'சிவபெருமான்' அவனைச் "சிவ சிவ" என்று இடையறாது எண்ணிக்கொண்டிருப்பதே சிந்தையின் செயல். அச் செயல் வேண்டத்தக்கது. அவ்வாறு நிற்கும் நிலை வேறொன்றும் எண்ணா நிலை யெனப்படும். இது பற்றற்றான் பற்றினைப் பற்றுவதாகும்; ஏனைய பற்றற்றதுமாகும். உள்ளத்தின்கண் 'சிவ' என்னும் முறையே உயிரும் உடலுமாகக் காணப்படும் ஒரு மொழிக்குரிய பெரும் பொருளுக்கன்றி வேறொன்றுக்கும் இடங்கொடாமல் நிற்பதே ஒரு நினைவும் இல்லாமல் நிற்பதாம். அவ்வாறு நிற்பாயாகவென்று உணர்த்தியருளிய நம் மோன குருவின் திருவடித் தாமரைகளிரண்டும் நீடுழி வாழ்வதாக என்று வாழ்த்தியே, எல்லாத் திசைகளிலும் தோள் கைகூப்பித் தொழும் நல்லறிவுடைய மேலோராந் தன்மையருக்கே "இறவாத இன்ப அன்புப்" பெருங்கனி கைகூடுமென்க.

(19)
மனத்தாலும் வாக்காலும் மண்ணவொண்ணா மோன
இனத்தாரே நல்ல இனத்தார் - கனத்தபுகழ்
கொண்டவரும் அன்னவரே கூறரிய முத்திநெறி
கண்டவரும் அன்னவரே காண்.