பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

462
நிகழும் மூன்று திருத்தொழில்களையுடையவனே, தவத்தால் நின் திருவாணை பெற்று அவற்றுள் ஒவ்வொரு தொழிலே ஆற்றிவரும் அயன், அரி, அரன் என்னும் மூவர்க்கும் முதலானவனே, 1 மூவுலகங்களும் தோன்றத் திருக்குறிப்புக் கொண்டருளும் பெருமானே; உன்னைப் போலத் தாயினும் சாலப் பரிவு கொள்ளும் ஒரு விழுமிய முழுமுதற்றெய்வம் வேறுமுண்டோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.

     (வி - ம்.) அன்பு - இச்சை. அறிவு - ஞானம், ஆற்றல் - செயல். வலதுகண் - ஆற்றல். நெற்றிக்கண் - அறிவு. இடதுகண் - அன்பு. இவை முறையே பகலோன், தழலோன், நிலவோன் எனவும் கூறப்படும்.

(31)
நேசிக்குஞ் சிந்தை நினைவுக்குள் உன்னைவைத்துப்
பூசிக்குந் தான்நிறைந்து பூரணமாய் - யோசித்து
நின்றதல்லால் மோனா நிருவிகற்ப நிட்டைநிலை
என்றுவரு மோஅறியே னே.
     (பொ - ள்.) மவுன குருவே, பெருநேயமாம் காதல்கொள் நெஞ்சமானது; நின்திருவடியினைத் தன்னகத்தே வைத்து இடையறாது தொழும்; தான் நிறைவுற்று நன்றாக ஆய்ந்து நின்றதல்லாமல், புணர்ந்தொன்றாய்ப் பூந்தொடை நார்போன்று அடங்கிநிற்பதாகிய எழுவாய்க் காட்சியெனப்படும் நிருவிகற்ப நிட்டை நிலை 2 எந்நாளிற் கைகூடுமோ? ஏழையேன் அறியேன். பூரணம் - நன்றாக.

(32)
அறிவில் அறியாமை அற்றறிவாய் நின்று
பிறிவறஆ னந்தமயம் பெற்றுக் - குறியவிழ்ந்தால்
அன்றைக் குடல்வேண்டேன் ஐயாஇவ் ஆக்கையையே
என்றைக்கும் வேண்டுவனே யான்.
     (பொ - ள்.) ஐயனே! அடியேன் சிற்றறிவுடனே அறியாமையும் நீங்கப்பெற்று, நின் திருவடியுணர்வாம் முற்றுணர்வாய் நின்று புணர்ப்பு முறையாற் பிறிவற நின்று பேரின்பமயம் பெற்று, வேறோர் எண்ணம் சிறிதுமில்லாமல் அமைந்தபோது இவ்வுடலே வேண்டேன்; அது கிட்டும்வரையும் இவ் வுடம்பினை எளியேன் வேண்டுவன்.

     (வி - ம்.) நன்மாணவன் ஒருவன் ஒரு நூலினைக் கற்றுக் கைவருங்காறும் கொண்ட நூலினைக் கைவிடாமை இதற்கொப்பாகும். இவ்வுண்மை வருமாறு :

"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
 திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
 உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
 உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே"
- 10 - 704
(33)
 1. 
'தேவரின்.' சிவஞானசித்தியார்; 1. 2 - 21.
 2.  
'ஐந்துபேர்.' 12. தடுத்தாட் - 104.