பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

472

யான் மொழிவதனைக் குறிக்கொண்டு கேட்பாயாக, ஆணவமுனைப்பினுள் அடங்கி அம் முனைப்பேயாக நீ நின்றமைபோன்றும், அக்காலத்து உன்னுள்ளே உறவாய்த் தோன்றாத் துணையாக யான் அடங்கி நின்றமை போன்றும், இக் காலத்து நீ என்னுள்ளே அடங்கி வேறு தோன்றாது என்னுள் யானாகவேயிருந்து பேரின்ப நுகர்ந்துகொண்டு என்றும் நிலைத்திருப்பாயாக.

(59)
என்னையுன்னை இன்னதிது என்னாமல் நிற்குநிலை
தன்னையரு ளென்ற தருணத்தில் - அன்னைபெற்ற
பிள்ளைக்குஞ் சொல்லாத பெற்றிகண்டாய் ஐயனே
உள்ளத்தின் உள்ளே உணர்.
     (பொ - ள்.) ஐயனே! என்னையும் உன்னையும் புணர்ப்பின்றி இன்னது விதுவென வெவ்வேறாக நிற்கு நிலையில்லாமல், புணர்ப்பு நிலையாக ஒன்றுபட்டு நிற்கும் நிலையினை அருளுதல் வேண்டுமென உள்ளத்தில் நாட்டம் தோன்றிய பொழுது, தாயானவள் தன் மணாளனோடாடிய இன்பத்தினைத் 1 தான்பெற்ற மகளுக்கும் சொல் லொண்ணாத்தன்மை போன்று உன்னுடைய உள்ளத்துணர்வின்கண் சொல்லொண்ணாத பேரின்பம் பெருக்காய் இருக்கும்.

(60)
சொன்னவர்தாம் நிட்டை தொகுத்திரார் நிட்டையிலே
மன்னினவர் போதியார் மாமவுனன் - தன்னுள்
விருப்பாகக் கைகாட்டி மிக்கவட நீழல்
இருப்பான் நிருவிகற்பத் தே.
     (பொ - ள்.) மோனகுருவின் வழிநின்று அகமுகப்பட்டு நிட்டையில் அடங்கியிருப்பவர் பேச்சற்றிருப்பர். அங்ஙனமன்றிப் புறமுகப்பட்டுச் சுட்டுப்பொருள் நாடி மௌனங் கைவிட்டு வாய்திறந்து பேசுவோருமிருப்பர். அங்ஙனம் பேசுவோர் நிட்டையின்பம் எய்தார். நிட்டையினியல்பு நினைவுகொளும் பொருட்டுச் சிவபெருமான் ஆலமர நிழலில் அறிவுப் பொறித் திருக்கையுடன் பேச்சற்று அசைவற்றுத் தான் இருந்து காட்டி யருளுகின்றனன். இங்ஙனமிருப்பதே வேறுபாடற்ற ஒன்றிய நிட்டையென்ப. அறிவுப் பொறி-சின்முத்திரை. ஆண்டான் பெருவிரலோ டாட்காட்டி தான்புணர ஆண்டாம் அறிவுப் பொறி.

(61)
இந்த நிருவிகற்பத் தெந்தை யிருக்கநிட்டை
சிந்தைநீ தேறாய் செகமனைத்தும் - வந்ததொடர்ப்
பாடுகெட அன்றோவோர் பாத்திரத்துக் காடல்அல்லால்
ஆடுவதேன் ஆட்டு மவன்.
     (பொ - ள்.) மோன குருவாகிய எந்தையே வேறுபாடற்ற நிட்டையின்கண் வீற்றிருந்த நீ, அந்நிலையினின்று நீங்கி ஆடுதற் கோலத்துடன்

 
 1. 
'முகத்துக் கண்கொண்டு.' 10. 2904.