(பொ - ள்.) (நிலையாப் பொருள்களை நிலையுடையன என்று மயங்கும்) நிலையில்லாத பொய் நெஞ்சே! மாயாகாரியமாகிய இவ்வுடம்பு நிலையில்லாத தென்று சொல்லப்படும் பொய்யுடம்பு ஆகும். ஆனால் உலகோர் அதனை மங்கள மொழியாக மெய்யென்று சொல்லுவர். உண்மையுணர்ந்த யான் அதனைப் பொய்யென்று உனக்குக்கூறினும், நீ அவ் வுண்மையை யறியாமல், சுட்டியுணரப்படும் ஒன்றே கொண்டு அப்பொய்யான உடம்பை மெய்யெனக் கூறுதல் பொருந்துமோ? (பொருந்தாது என்க.) இவ் வுண்மையில் சிறிதும் ஐயுறவின்றித் தன் பேரின்பவண்ணமே தானாய் நிற்கும் சிவபெருமானை அனைத்துயிர்க்கும் நிலையான புகலிடமென்று சார்ந்தனையாயின் பேரின்பவண்ணமாக நீயும் யாமும் இன்பந்துய்த்து அவ்வண்ணமாகவே யிருப்போம்.
(67)
பூங்கா வனநிழலும் புத்தமுதுஞ் சாந்தபதம் | வாங்காத ஆனந்த மாமழையும் - நீங்காவாஞ் | சொல்லிறந்து மாண்டவர்போல் தூமவுன பூமியினான் | இல்லையென நின்ற இடம். |
(பொ - ள்.) பேச்சற்றுச் செயலற்று மாண்டவர் போற்றும் மோன நிலத்தில் நான் என்னும் முனைப்பு நண்ணாமல் நின்ற இடமே பேரின்பம் பெருகுமிடமாகும் அவ்விடம் நறுமண நிறைந்துள்ள அழகிய சோலை நிழலும் புதிய அமிழ்த இன்பமும், அமைந்த நிலையும், நீங்காத பேரின்பப் பெருமழையும் நம்மைவிட்டு ஒருகாலமும் நீங்காதென்க.
(68)
இடம்கானம் நல்லபொரு ளின்பம் எனக்கேவல் | அடங்காக் கருவி அனைத்தும் - உடனுதவ | மந்தார தாருவென வந்து மவுனகுரு | தந்தானோர் சொற்கொண்டு தான். |
(பொ - ள்.) (நிலையாவுலகில் வாழ்வோர் இடம் பொருள் ஏவலால் செருக்குற்று இன்புறுவர். ஆனால், அவ்வின்பமும் நிலையில்லாத தாய்த் துன்பப் பிறப்பினையும் எய்துவர். அவ்வாறின்றி) அடியேனுக்கு மோனகுருவாக எழுந்தருளிவந்து ஆட்கொண்டவர், உறையும் இடமாக மரமடர்ந்த காட்டினையும், இன்புறும் பொருளாக நல்ல திருவடிநினைவினையும், ஏனையோர்க்கு எளிதில் வயப்படாத தத்துவக் கூட்டங்களை வயப்படும் ஏவலராகவும் தந்தருளினர்; அவர் மந்தார மரத்தினை யொப்பர்; இவ்வனைத்தும் அவரருளிய சிவ என்னும் ஒரு சொற்கொண்டேயாம்.
(69)
தானந் தவம்ஞானஞ் சாற்றரிய சித்திமுத்தி | ஆனவையெல் லாந்தாமே யாகுமே - மோனகுரு | சொன்னவொரு சொல்லாற் சுகமா யிருமனமே | இன்ன மயக்கமுனக் கேன். |