பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

477

இன்பத்தேன் ஒழுகித் தரும் சுவை போன்று சுவைதரவல்ல வாய் மொழியும் அடங்கிற்று; பேச்சடங்கவே மூச்சடங்குமாதலால் செயல்களும் அடங்கின. செயல்களும் அடங்கினதால் புற நோக்கங்களும் அறவே நீங்கின. நீங்கவே, அகநோக்கம் முதிர்ந்து சிவனென்ற ஒரே நிலையாகிய இன்ப நிட்டை எளிதாகவும் இனிதாகவும் திருவருளால் கைகூடிற்று.

(73)
எல்லாமே மோனநிறை வெய்துதலால் எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார் - பொல்லாத
நானெனஇங் கொன்றை நடுவே முளைக்கவிட்டிங்
கேனலைந்தேன் மோனகுரு வே.
     (பொ - ள்.) மௌனமெய்க்குருவே! யாவும் இன்பமா யமைவதற்கு வாயிலாநிற்பது மோன மென்றறிந்து, எல்லா இடத்திலும் (செம்பொருட்டுணிவினராம் சித்தாந்தச் செல்வர்கள் நல்லாரெனப்படுவர். அத்தகைய) நல்லார்கள் மேலாம் மோன நிலையினை நாடினர். நல்லறிவு சிறிதுமில்லாத பொல்லாத யான், நான் என்னும் முனைப்பை நடுவே முளைக்கவிட்டு இங்கு ஏன் அலைந்துதிரிந்தேன்?

(74)
மோன குருவளித்த மோனமே யானந்தம்
ஞானம் அருளுமது நானுமது - வானாதி
நின்ற நிலையுமது நெஞ்சப் பிறப்புமது
என்றறிந்தேன் ஆனந்த மே.
     (பொ - ள்.) மவுனகுரு அளித்தருளிய பேச்சடங்கிய மோனமே மிகப் பேரின்பப் பேரறிவு; திருவருளுமதுவே; இத் திருவருளினுள் அடக்கமாகவுள்ள அடியேனும் அதுவே; வான் முதலாகச் சொல்லப்படும் ஐம்பூதங்களின் இயக்கங்களும் அதுவே; மனந்தோன்றி இயங்குவதும் அதுவே! இத்தகைய மெய்ம்மையினைத் திருவருளாலுணர்ந்தேன். உணரவே எல்லாம் பேரின்ப மயமாகவே அமைந்துள்ளன.

     (வி - ம்.) ஒருவர்க்குச் சிவகுருவின் அருண்மொழி கிடைக்கப் பெற்றால், அப்பொழுது இறையருளால் எல்லாம் முறையுற இயங்கும் உண்மை புலனாகும். புலனாக எல்லாவற்றானும் அவர் எய்துவது திருவருளின்பமேயாம்.

(75)
அறிந்தஅறி வெல்லாம் அறிவன்றி யில்லை
மறிந்தமனம் அற்ற மவுனஞ் - செறிந்திடவே
நாட்டினான் ஆனந்த நாட்டிற் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.
     (பொ - ள்.) என்னாலறிந்த அறிவுகளெல்லாம் எனக்கு வேறாக இல்லை. நன்னெறிச் செல்லும் போக்கினுக்குத் தடை செய்து எளியேனைப் புகுத்தும் மனமும் வழிக்கு வந்தது. மௌனம் நிறையவே நிறை