பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

483

இன்பமய மாயுலக மெல்லாம் பிழைப்பதற்குன்
அன்புநிலை என்பார் அதுவும்நினை யன்றியுண்டோ
உன்புலத்தை ஓரின்அருட் கொப்பாவாய் நெஞ்சேநீ
தென்புலத்தா ரோடிருந்து செய்பூசை கொண்டருளே.
     (பொ - ள்.) மனமே, இவ் வுலகமனைத்தும் துன்பில் இன்பமாய்ப் பிழைத்துய்வதற்கு அன்பு நிலை காரணமென்பர்; அவ்வன்புநிலை உன்னுடைய ஒடுக்கத்தினால் வருதல் வேண்டும்; உன்னுடைய இயல்பான அறிவை ஆராயின் (எல்லாப் பொருள்களினும் ஆருயிர்களின் பொருட்டுக் கலந்துநிற்கும்) திருவருளுக்கு ஒப்பாவை; ஆனால் நீ உன் பேராசையினால் ஒன்று விட்டொன்று பற்றி எல்லாப் பொருள்களுடனும் கலக்கின்றாய். அதனால் நீ இறந்துபட்டுத் தென்புலத்தாருடன் அவர் தங்கும் பிதிர் உலகில் சேர்ந்து விடுவாயானால் ஆங்குள்ளார்க்குச் செய்யும் பூசையுடன் உனக்கும் பூசை செய்வேன். அதனை நீ ஏற்றுக் கொள்வாயாக.

(8)
அருளேயோ ராலயமா ஆனந்த மாயிருந்த
பொருளோடு யானிருக்கப் போயொளித்த நெஞ்சேநீ
மருளதீர் முயற்கோடோ வான்மலரோ பேய்த்தேரோ
இருள்தீர நீயுறைந்த தெவ்விடமோ காணனே.
     (பொ - ள்.) மனமே, தன்னின் நீங்காத் தீயும் வெப்பமுக போன்றுள்ள அறிவாற்றலாகிய திருவருளே தனக்குத் திருக்கோவிலாப் வாலறிவாம் சிவபெருமான் பேரின்பப் பெருவடிவாயுள்ள மெய்ப் பொருளாவன்; அப் பொருளோடு திருவருளால் அடியேன் போய்ச் சேர்ந்ததும் நீ எங்கேயோ ஒளியைக் கண்ட இருள்போல் ஒளித்தும் கொண்டாய்; அவ்விடத்தைச் சொல்லொண்ணாமையால் இல்பொருளொப்பாக மயக்கம் நீங்கிய முயற்கொம்போ? வானத்தாமரையோ? கானல் நீரோ? எவ்விடமோ? காணேன்.

(9)
எவ்விடத்தும் பூரணமாம் எந்தைபிரான் தண்ணருளே
அவ்விடத்தே உன்னைநெஞ்சே ஆராயிற் கண்டிலனே
அவ்விடத்து மாயையிலே மாண்டனையோ அவ்விடமுஞ்
செவ்விடமே நீயுஞ் செனனமற்று வாழியவே.
     (பொ - ள்.) மோனகுருவின் தண்ணருளால், யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் எந்தையாகிய சிவபெருமானின் திருவருள் எய்தப் பெற்றேன்; பெறவே அவ்விடத்தில் உன்னைத் தேடிப் பார்த்தேன்; (உனக்கு உலகியலில் முனைத்து முளைக்கும் செயலடங்கினமையின்) உன்னைக் கண்டிலேன்; எனவே நீ உனக்குக் காரணமாகவுள்ள மாயையின்கண் அடங்கிவிட்டனை போலும்; அம் மாயையும் நீ யொடுங்குவதற்குரிய நல்ல இடமே; அங்கேயே நீ முளையாது அடங்கி விடுவாயாக.

(10)