உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல் | ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக் | கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக் | காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. |
(பொ - ள்.) தேவரீர் (தொன்மையிலேயே உள்ள ஆருயிர்த்தொகைகளுக்கு) உடம்பைப் படைத்து அவ்வுயிர்களை அவற்றொடு வினைக்கீடாகப் பொருத்தி உலவவிட்ட கூட்டங்களுள் ஏழையேனை இவ்வுடலும் உலகமும் நிலையில்லாதன என்று சொல்லப்படும் பொய்யெனத் தோன்றினும், அவற்றினின்றும் விடுதலை பெறுவதற்கு வழியாகிய பற்றறுதியைக் கைக்கொண்டிலேன். கைக்கொள்ளாததுமல்லாமல் உலகத்துள் அலைந்துழன்றேன். எளியேனைப்போன்ற கொடியோர், வேறெவருளர்? கடவுளே காட்டியருள்வாயாக.
(வி - ம்.) முதல்வன் உடம்பினைப் படைத்து உயிர்களை அவ்வுடம்பினுள் பொருத்தி வைத்ததையே உயிர்களைப் படைத்தானென முகமனாகக் கூறப்படும். முகமன்-உபசாரம். பற்றிலாநிலை-துறவு.
(13)
தேவரெலாந் தொழச்சிவந்த செந்தாள் முக்கட் | செங்கரும்பே மொழிக்குமொழி தித்திப் பாக | மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செ விக்கே | மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான். |
(பொ - ள்.) தேவர் மூவர் மற்றும் யாவராலும் நாளும் மூடி சாய்த்துத் தொழப்படுதலினால் (சிவபெருமான்) சிவப்பு நீங்காத செவ்விய திருவடிகளையும், மூன்று திருக்கண்களையும் உடைய செம்மையான கரும்பே, சொல்லுக்குச் சொல் மாறாத, தெவிட்டாத பேரின்ப இனிமையுள்ளதாகக் காணப்படும், மூவர் முதலிகள் பாடியருளிய திருநெறிய தமிழ்மறையினைக் கேட்டருளும் (தோடு குழை யணியும் பீடுடைய) திருச்செவிக்கு மூடனாகிய அடியேன் புலம்பிய புன்சொற்கள் ஏற்கப்பெறுவனவோ?
(வி - ம்.) மூவர் முதலிகள்: ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசு, ஆளுடைய நம்பி. இவர்களால் பாடியருளப்பட்டன தேவாரம் என்னும் திருமாமறைகள். அவை அடங்கன் முறையெனவும் வழங்கப்படும். இவற்றை முறையே திருக்கடைக்காப்பு, தேவாரம், திருப்பாட்டு எனவும் வழங்குவர். இவை ஏழு திருமுறைகளாக வகுக்கப் பட்டுள்ளன. ஆளுடைய பிள்ளையார் திருமுறைகள் ஒன்றுமுதல் மூன்று; ஆளுடைய அரசர் திருமுறை நாலு ஐந்து ஆறு ஆக மூன்று; ஆளுடைய நம்பி திருமுறை ஒன்று ஆக ஏழு. இவற்றில் சிவபெருமான் மிக்க விருப்பினன் என்னும் மெய்ம்மை "நல்லிசை ஞானசம்பந்தனு நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ்மாலை, சொல்லியவே சொல்லி ஏத்து கப்பானை" என ஆளுடைய நம்பி ஓதியருளியவாற்றான் உணர்க.
இத் திருமுறைகளின் சிறப்பு சொலற்கரியது. ஓதி வழிபாடு செய்து உணர்தற்குரியது. அடிசேர் ஞானம் தரவல்ல வுண்மை வருமாறு :