(வி - ம்.) உலகினைத் தோற்றியருள்வது பண்டே புல்லிய மல நீக்கத்தின் பொருட்டாம்; ஒடுக்குவது இருவினைகளைச் செய்து செய்து இளைத்த இளைப்பு நீக்குதற்பொருட்டேயாம். அவ்வளவேயன்றி இல்லாத வுயிர்களைப் படைத்ததாகக் கற்பித்துக்கூறும் வெறுங் கற்பனையன்று. உள்ளதாகிய உயிர்களுக்கு உள்ளதாகிய மாயையினின்று உலகுடல்களைப் படைத்தளிப்பதே படைப்பென்க.
(17)
பொருந்துசகம் அனைத்தினையும் பொய்பொய் யென்று | புகன்றபடி மெய்யென்றே போத ரூபத்(து) | இருந்தபடி யென்றிருப்ப தன்றே யன்றோ | எம்பெருமான் யான்கவலை யெய்தாக் காலம். |
(பொ - ள்.) (ஆருயிர்கள் உய்யும்பொருட்டுத் திருவருளால் மாயையின் காரியமாக அவ்வுயிர்களுக்கு அளிக்கப்பட்டுப்) பொருந்தியுள்ள உலகம் அனைத்தினையும் நிலையில்லாதன, நிலையில்லாதன என்று பொருள்படும் பொய், பொய்யென்று உணர்த்தியபடி அங்ஙனம் உணர்த்தப்பட்ட உண்மையே மெய்யென்று உணர்ந்த அறிவு வண்ணமாயிருந்தபடி எக்காலத்தில் நிலையாகவிருப்பது? எம்பெருமானே! அக்காலமன்றோ அடியேன் கவலையின்றியிருக்குங்காலம்?
(18)
காலமே காலமொரு மூன்றுங் காட்டுங் | காரணமே காரணகா ரியங்கள் இல்லாக் | கோலமே எனைவாவா என்று கூவிக் | குறைவறநின் அருள்கொடுத்தாற் குறைவோ சொல்லாய். |
(பொ - ள்.) (ஊழிமெய்யாகிய கால தத்துவத்தை இயக்கியருளுவதால் சிவபெருமான் கால காலன் எனப்படுவன்; அம் முறையினால்) காலமே! (அக் காலமெய் இறப்பு நிகழ்வு எதிர்வு என்று பாகுபாடுபெறும் மூன்றினுக்கும் காரணமாக நிற்பவனும் சிவனே; அதனால்) காரணமே காரணகாரியங்கடந்த திருவருட்கோலமே, அடியேனை நின் பெருந்தண்ணிளியால் வாவென்றழைத்து, முற்றாக நின் திருவருளினைக் கொடுத்தால், நின்னிறையருட்குக் குறைவுண்டாமோ? திருவாய் மலர்ந்தருள்வாயாக.
(19)
சொல்லாய தொகுதியெல்லாங் கடந்து நின்ற | சொரூபானந் தச்சுடரே தொண்ட னேனைக் | கல்லாகப் படைத்தாலும் மெத்த நன்றே | கரணமுடன் நான்உறவு கலக்க மாட்டேன். |
(பொ - ள்.) சொற்றொகுதிகளெல்லாம் கடந்துநின்ற பேரின்ப வடிவமான பெருஞ்சுடரே, நின் அடிமையாகிய எளியேனைக் கல்லாகப் படைத்திருந்தாலும் மிகவும் நன்றாக இருந்திருக்கும். (பிறப்புக்கு வித்தாகிய இருவினைகளிற் புகுத்தும் எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு