(பொ - ள்.) "ஆதியந்தங் . . . . . . நிமலமாகி" - (தோற்றவொடுக் கங்களாகிய) பிறப்பு இறப்புகள் இல்லாத விழுமிய முழு முதலாய் எளியேமை (தன் திருவடித்தொண்டினுக்கு) ஆளாக்கிக் கொள்ளுதற் பொருட்டு (பேதித்து) வளர்த்தெடுத்த நற்றாய்போல, திருவருள் முறைமைசேர் (சிவ) குருவாகி, மாற்றம் மனங் கழிய நின்ற அழிவில்லாத உண்மைப் பொருளாய், மாசிலதாய், மலமிலதாய் ஆகி;
"வாதமிடுஞ் . . . செய்வாம்" - (உண்மையோராது பற்று மிகுதியால் நிலையிலாப் பயனில் வேட்கையுற்றுச் சொல்வென்றி வேண்டி) வீண் வழக்காடுங் கொள்கையினராகிய சமய நெறியாளர்கட்கு உணர வொண்ணாததாய், பேச்சற்ற மூதறிவாளர்கட்கு அவர்பால் மேலோங்கி வெளிப்பட்டருளும் மெய்த்தன்மை மாறாது விளங்குகின்ற, பேரறிவுப் பேரொளியை அடியேன் உயிர்த்துணையாய் உள்நின்று உணர்த்தும் ஒப்பிலா உதவியைத் திருவருளால் நாடி, இன்பக்கண்ணீர் பொழியக் கைகளை உச்சிமேற் குவித்துத் தொழுதலை வழுவிலாது செய்குவாம்.
(வி - ம்.) நீதி - முறைமை. நிச்சயம் - அழிவிலா உண்மை. சொச்சம் - மாசின்மை. கரம் - கை. மௌனம் - பேச்சறல்; மோனம்.
இருவினையொப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம், குருவருள் எய்து முறையினை வருமாறுணர்க :
| "நாடியசத் திநிபாதம் நாலு பாதம் |
| நண்ணும்வகை எண்ணரிய ஞான பாதம் |
| கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானம் |
| கூத்தன்ஒரு மூர்த்தியொடு குறுதி மோகம் |
| நீடியகே வலசகலம் நிகழா வாறு |
| நிறுத்திமலம் அறுக்குமிது நிலையார் சுத்தம் |
| கேடில்புகழ் தரும்சரியை கிரியா யோகக் |
| கேண்மையரேல் இவைஉணர்த்தக் கிளக்கும் நூலே." |
| - சிவப்பிரகாசம், 49. |
| "உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாஞ் |
| சவலைக் கடலுளனாய்க் கிடந்து தடுமாறும் |
| கவலைக் கெடுத்துக் கழலிணைகள் தந்தருளும் |
| செயலைப் பரவிநாம் தெள்ளேணங் கொட்டாமோ," |
| - 8. திருத்தெள்ளேணம், 17 - |
(11.)
அகரவுயி ரெழுத்தனைத்து மாகி வேறாய் | அமர்ந்ததென அகிலாண்டம் அனைத்துமாகிப் | பகர்வன எல் லாமாகி அல்ல தாகிப் | பரமாகிச் சொல்லரிய பான்மை யாகித் |