பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

532

    (பொ - ள்.) அடிக்கடி உற்றுற்றுப் பார்த்து, தேவரீர் திருக்காட்சி கிடைக்கப்பெறாமையால் மிகவும் மருட்சி எய்தினேன்; அத்தகைய பாவியாகிய என்னை, தேவரீர் சற்றிரங்கி ஆளத்தகாதோ?

(46)
எள்ளளவும் நின்னைவிட இல்லா எனைமயக்கில்
தள்ளுதலால் என்னபலன் சாற்றாய் பராபரமே.
    (பொ - ள்.) எள்ளளவேனும் தேவரீரைவிட வேறு துணையில்லாத அடியேனை மீட்டும் பிறவிப் பெருமயக்கிற் றள்ளிவிடுதலால் தேவரீருக்கு உண்டாம் பயன் யாது? உரைத்தருள்வாயாக.

(47)
பாடிப் படித்துலகிற் பாராட்டி நிற்பதற்கோ
தேடி யெனையடிமை சேர்த்தாய் பராபரமே.
    (பொ - ள்.) (அடியேன் பொருட்டுச் சிறிதும் திருவருளினைத் தேடிக் கொள்ளாது) பற்பல செய்யுட்களைப் பாடியும், பற்பல நூல்களைப் படித்தும் பிறர் புகழ்ந்து நிற்பதற்கோ? அடியேனை அடிமையாகத் தேடிச் சேர்த்தனை?

(48)
சொன்னத்தைச் சொல்வதல்லாற் சொல்லறவென் சொல்லிறுதிக்
கென்னத்தைச் சொல்வேன் எளியேன் பராபரமே.
    (பொ - ள்.) முன்னோர்கள் சொல்லிவைத்தவற்றை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதல்லாமல், சொல்லற்ற மவுன நிலையைத் தேடிக்கொள்வதற்கு ஏழையேன் என் சொல்லவல்லேன்!

(49)
சொல்லும் பொருளும்அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும் பகலுமெனக் காசை பராபரமே.
    (பொ - ள்.) சொல்லும் அச் சொல்லாற் பெறப்படும் பொருளும் ஆகியவற்றை விளக்கிப் பாராட்டிக்கொண்டிருப்பதை அறவே விட்டொழித்து மவுனமுற்று வாழ்வதற்கே இரவும் பகலும் அடியேன் பெருவிருப்பங் கொண்டுள்ளேன்.

(50)
நேச நிருவிகற்ப நிட்டையல்லால் உன்னடிமைக்
காசையுண்டோ நீயறியா தன்றே பராபரமே.
    (பொ - ள்.) வேறுபாடற்ற நிட்டையின்கண் அடியேனுக்கு அன்புண்டேயல்லாமல், உன் அடிமைக்கு வேறெதன் கண்ணும் ஆசையுண்டோ! (இல்லையென்றபடி.) இவ்வுண்மை நீ யறியாததன்றே?

(51)
துச்சனென வேண்டாஇத் தொல்லுலகில் அல்லல்கண்டால்
அச்சம் மிகவுடையேன் ஐயா பராபரமே.
    (பொ - ள்.) அடியேனைப் புன்மையனென எண்ணுதல் வேண்டா; இப் பழைமையான உலகில் உள்ள துன்பங்களைக் கண்டால், ஏழையேன் மிகுந்த அச்சமுடையேன் ஐயனே.

(52)