கண்ணாவா ரேனும்உனைக் கைகுவியா ராயின்அந்த | மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே. |
(பொ - ள்.) அடியேனுடைய கண்ணினை யொத்த சிறப்புடைய ராயினும் நின்திருவடியினைக் கைகூப்பித் தொழாராயின் (அவர் மீண்டும் பிறந்துழலும் தன்மையர்) அந்த மண்ணாவார் நட்பினை அடியேன் ஒரு பொருளாக மதிக்கமாட்டேன்.
(53)
கொல்லா விரதங் குவலயமெல் லாம்ஓங்க | எல்லார்க்குஞ் சொல்லுவதென் இச்சை பராபரமே. |
(பொ - ள்.) இவ்வுலகிலுள்ளார் அனைவர்கட்கும் எவ்வகைச் சிற்றுயிரையும், எவ்வகைக் காரணத்தின் பொருட்டும் கொல்லாதிருப்பதே மேலாம் நன்மையென எடுத்துக்கூறி, அதுவே பெருநோன்பென வற்புறுத்துதலே அடியேனின் நீங்கா விருப்பம்.
(வி - ம்.) உயிரை உடம்பினின்று நீக்கிவிடுதலே கொலை. எனினும் உயிர் உடம்பினின்று நீங்கினாற் போதும் என எண்ணம் வரும்படி துன்புறுத்துவது. அக் கொலையினும் கொடியதாகும். எனவே மேலாங் கடவுணெறி யென்றது எவ்வகையுயிரையும் சிறிதும் துன்புறுத்தா திருப்பதேயாம். இவ்வுண்மை வருமாறு :
| "நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றும் |
| கொல்லாமை சூழு நெறி." |
| -திருக்குறள், 324. |
(54)
எத்தாற் பிழைப்பேனோ எந்தையெ நின்னருட்கே | பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே. |
(பொ - ள்.) அடியேனின் அருமையினும் அருமைமிக்க தந்தையே! எவ்வகையான வழிகளால் எளியேன் பிழைப்பேன்? நின் திருவருட்கே பெருங் காதலின் மிக்கதாகிய பித்தானேன்; அடியேன் மிகவும் அறிவில்லாதவன்.
(55)
வாயினாற் பேசா மவுனத்தை வைத்திருந்துந் | தாயிலார் போல்நான் தளர்ந்தேன் பராபரமே. |
(பொ - ள்.) வாயினாற் பேசும் தன்மையினை அகற்றிப் பேசா மவுன நிலையினை அடியேன் கைக்கெண்டிருந்தும் (நின்திருவருள் கைகூடாமையால்) தாயில்லாத பிள்ளையைப்போல் தளர்ந்தேன்.
(56)
அன்னையிலாச் சேய்போல் அலக்கணுற்றேன் கண்ணார | என்னகத்தில் தாய்போல் இருக்கும் பராபரமே. |
(பொ - ள்.) அடியேன் தாயில்லாத பிள்ளையைப் போல் துன்புற்றேன், கண்ணார அடியேன் மனத்தில் தாய் போலிருந்தருள்பவனே.
(57)
உற்றுநினைக் கில்துயரம் உள்ளுள்ளே செந்தீயாய்ப் | பற்றநொந்தேன் என்னைமுகம் பார்நீ பராபரமே. |