பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்


538


பொருள்களில் மயக்குற்று அவற்றின்கண் நாட்டம் அடியேனுக்கு வருதல் நன்றாமோ? நாட்டம் - சிந்தனை.

(79)
எத்தன்மைக் குற்ற மியற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தன்மை நின்னருளும் அன்றோ பராபரமே.
     (பொ - ள்) எவ்வகையான குற்றங்களைச் சிறுபிள்ளைகள் தெரிந்தோ தெரியாமலோ செய்தாலும், அவற்றை ஈன்ற தாய் பொறுத்து நல்வழிப்படுத்துவள். அதுபோல் தேவரீர் திருவருளும் அடியேங்களுக்கு அவ்வியல்பன்றோ?

(80)
எத்தனையோ தேர்ந்தாலும் என்னாலே இன்பமுண்டோ
சித்துருவே இன்பச் சிவமே பராபரமே.
     (பொ - ள்) எத்தனைவகையாக ஆராய்ந்து பார்த்தாலும், அடியேனுக்கு அடியேனால் இன்பமுண்டோ? பேரறிவுப் பெருவடிவே, பேரின்பப்பிழம்பாம் சிவனே, நின்றிருவருள் ஒன்றினால் மட்டும் அடியேனுக்கு இன்பமுண்டு.

(81)
மண்ணொடுவிண் காட்டி மறைந்துமறையா அருளைக்
கண்ணொடுகண் ணாகஎன்று காண்பேன் பராபரமே.
     (பொ - ள்) மண்முதல் விண்ணீறாகக் காணப்படும் உலகியல்புகளைக் காட்டித் தான் மறைந்தும், சில வேளைகளில் தன்னைக் காட்டியும் வருகின்ற நீங்காத்திருவருளைக் கண்ணுடன் கூடிய கண்ணொளி போன்று நீக்கமின்றி என்று காண்பேன்?

(82)
பஞ்சரித்து நின்னைப் பலகால் இரந்ததெல்லாம்
அஞ்ச லெனும்பொருட்டே அன்றோ பராபரமே.
     (பொ - ள்) அடியேனின் ஏழைமையினால் நின்பால் மன்றாடி விண்ணப்பிப்பதெல்லாம், அடியேனைத் திருக்கடைக்கண்சாத்தி அஞ்சாதிருப்பாயாக என்று அருளுவதற்கன்றோ?

(83)
எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்
அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே.
     (பொ - ள்) (எங்கணும் வெளி நிறைந்திருப்பது போன்று) எவ்விடத்து நோக்கினும் அவ்வவ்விடங்களிலும், எவ்வுயிர்களிடத்தும் அவ்வுயிர்க்குயிராய் ங்கங்கே நின்றருள்வதும் நின்திருவருளன்றோ?

(84)
அனைத்துமாய் நின்றாயே யான்வேறோ நின்னை
நினைக்குமா றெங்கே நிகழ்த்தாய் பராபரமே.
     (பொ - ள்) (அனைத்துயிர்களும் தன்னுள் அடங்கு நிறைவாகிய வியாப்பியமாய்த் தான் அவ்வுயிர்களைத் தன்னுள் அடக்கும் அகல் நிறைவாகிய வியாபகமாய் இருத்தலின்) எல்லாப் பொருளுக்கும் எல்லாவுயிர்களுக்கும் இடங்கொடுத்துக்கொண்டு அனைத்துமாய்