நேரே நினதருளென் நெஞ்சைக் கவரின்ஒன்றும் | பாரேன் சுகமும் படைப்பேன் பராபரமே. |
(பொ - ள்) -(சிவபெருமானே! நின்) திருவருள் அடியேன் உள்ளத்தினை நேராக நின்று ஆட்கொள்ளுமாயின், அத் திருவருளையன்றிப் பிறிதொரு பொருளையும் பெரிதென நோக்கேன்; நின்திருவடிப் பேரின்பமும் வந்து நிறையும், அதனைத் திருவருளால் நுகர்வேன். படைப்பேன் - நுகர்வேன்.
(99)
வான்காண வேண்டின் மலையேற லொக்கும்உன்னை | நான்காணப் பாவனைசெய் நாட்டம் பராபரமே. |
(பொ - ள்) -சிவபெருமானே! நின்திருவடியினை என்னறிவு கொண்டு காண முயல்வது வானத்தைக் காண மலையின்மேல் ஒருவன் ஏறுவதனோ டொக்கும். (நின்திருவருளாலேயே நின்திருவடியினைக் காணுதல் வேண்டும்.)
(வி - ம்) மலைமேல் மேகந்தவழ்வதை ஒருவன் வானந்தவழ்வதாக எண்ணி மலைமேல் ஏறி வானத்தைக் காண முயன்றனன். அங்கு நின்று வானத்தை நோக்கினன். அப்பொழுதும் வானம் மலையடிவாரத்தில் நின்று பார்க்கும்போதிருந்த நிலைமையே காணப்பட்டது. அதுபோல் திருவருள் சுட்டுணர்விற்கு அப்பாற்பட்டது. திருவருளாற்றான் காண முடியும். காதாலுணரும் ஒலியைக் கண்ணாலுணர இயலாது. ஒலியாலுணர்த்தப்படும் பொருளும் ஒலியின் வேறே. அவ்வொலியை நினைவூட்டும் வரிவடிவினைக் கண் உணரும். அதுபோல் உயிரின் அறிவு கொண்டு திருவருளைக் காட்சியருள விண்ணப்பிப்பது அன்றி வேறேதுமின்று. இது மாணவன் பாடம் கற்பிக்குமாறு நல்லாசானை வேண்டுவது போன்றாகும்.
(100)
வாதனைவிட் டுன்னருளின் மன்னினல்லால் வேறுமொரு | சாதனைதான் உண்டோநீ சாற்றாய் பராபரமே. |
(பொ - ள்) -உலகியற்பயிற்சி நீங்கி நின் திருவருளின் நீங்காதழுந்தும் (அனுபவிக்கும்) பேறு பெறுதல் அல்லாமல் (திருவடிப்பேற்றிற்கு) வேறு வகையான தொழிலும் பயிற்சியும் உண்டோ? திருவாய்மலர்ந்தருள்வாயாக. வாதனை - பயிற்சி.
(101)
பாரகமும் விண்ணகமும் பற்றாக நிற்பதருள் | தாரகத்தைப் பற்றியன்றோ சாற்றாய் பராபரமே. |
(பொ - ள்) -மண்முதல் விண்முடிவாகவுள்ளன யாவும் காரியப்படுவதற்கு நிலைக்களமாக இருப்பது நாயனீருடைய திருவருளின் பற்றுக் கோட்டினாலன்றோ? திருவாய்மலர்ந்தருள்வாயாக.
(102)
விளக்குந் தகளியையும் வேறென்னார் நின்னைத் | துளக்கமறச் சீவனென்று சொல்வார் பராபரமே. |
(பொ - ள்) -ஆருயிர்கட்கு நிலைக்களமாக நின்றருளும் பேருயிராம் சிவபெருமானைத் திருவருளால் தெள்ளத் தெளிந்த மெய்யுணர்வினர்,